கடைசி 1 விக்கெட்டுக்கு 232 ரன்கள் பார்ட்னர்ஷிப்! 11வது வீரராக இறங்கி சதமடித்த CSK பவுலர்! #Miracle

2024 ரஞ்சிக்கோப்பை தொடரின் காலிறுதிப்போட்டியில் மும்பை அணிக்காக 11வது வீரராக கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே சதமடித்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 10வது மற்றும் 11வது வீரர்கள் இருவரும் சதமடித்து வரலாறு படைத்துள்ளனர்.
துஷார் தேஷ்பாண்டே
துஷார் தேஷ்பாண்டேweb
Published on

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது காலிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, கர்நாடகா, பரோடா, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய 8 அணிகள் காலிறுதிப்போட்டியில் விளையாடுகின்றன.

இந்நிலையில், நான்கு காலிறுதி ஆட்டங்களில் 2 காலிறுதிப் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன. முடிவுக்கு வந்துள்ள 3வது காலிறுதிப்போட்டியில் சாய்கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி நடப்பு சாம்பியன் அணியான சட்டீஸ்வர் புஜாராவின் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

தமிழ்நாடு அணி
தமிழ்நாடு அணி

அதேபோல 4வது காலிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக கடைசிவரை போராடிய ஹனுமா விஹாரியின் ஆந்திரா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதிசெல்லும் வாய்ப்பை இழந்தது. கடந்த 2023 ரஞ்சிக்கோப்பை தொடரிலும் மத்திய பிரதேச அணிக்கு எதிராக காலிறுதியில் தோற்று வெளியேறிய ஆந்திரா அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறியது.

மற்ற காலிறுதி ஆட்டங்களில் முடிவுகள் தாமதமான நிலையில், மும்பை மற்றும் பரோடா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது காலிறுதிப்போட்டியில் மும்பை அணியின் இரண்டு பந்துவீச்சாளர்கள் அரிதான வரலாற்று நிகழ்வை நிகழ்த்தி காட்டியுள்ளனர். 10வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த தனுஷ் கோட்டியன் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இரண்டு பந்துவீச்சாளர்களும் ஒரே இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியுள்ளனர்.

துஷார் தேஷ்பாண்டே
சர்ஃபராஸை மறைமுகமாக தாக்கி பேசிய சேவாக்! தோனியை வைத்து பதில் அட்டாக் செய்த ரசிகர்கள்! என்ன நடந்தது?

சதமடித்த 2 பந்துவீச்சாளர்கள்! டிராவில் முடிந்த காலிறுதிப்போட்டி!

விறுவிறுப்பாக நடைபெற்ற 2024 ரஞ்சிக்கோப்பை தொடரின் 2வது காலிறுதிப்போட்டியில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி சர்பராஸ் கான் தம்பியான முஷீர் கானின் அட்டகாசமான இரட்டை சதத்தின் உதவியால் 384 ரன்கள் குவித்தது. தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய பரோடா அணி கேப்டன் சோலங்கி மற்றும் ஷஸ்வத் ராவத் இருவரும் சதமடித்த போதும், மற்ற வீரர்களின் சொதப்பலால் 348 ரன்கள் மட்டுமே எடுத்தது.

36 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கவீரர் ஹர்திக் தாமோர் 114 ரன்களும், பிரித்வி ஷா 87 ரன்கள் எடுத்திருந்திருந்த போதும் மற்றவீரர்களின் சொதப்பலால் 337 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. எப்படியும் அடுத்த 10 பந்துகளில் ஆட்டம் முடிந்துவிடும் என்று நினைத்தபோது, 10வது மற்றும் 11வது வீரராக களமிறங்கிய பந்துவீச்சாளர்கள் தனுஷ் கோட்டியன் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இரண்டு வீரர்களும் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி அட்டாக்கிங் கிரிக்கெட் ஆட, எந்த பரோடா பந்துவீச்சாளர்களாலும் அதை தடுத்து நிறுத்தமுடியவில்லை. 129 பந்துகளை எதிர்கொண்ட கோட்டியன் 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என விரட்டி 120 ரன்களும், அதேபோல 129 பந்துகளை எதிர்கொண்ட சிஎஸ்கே பவுலர் துஷார் தேஷ்பாண்டே 10 பவுண்டரிகள், 8 சிக்சர்களை பறக்கவிட்டு 123 ரன்களும் குவித்து மிரட்டிவிட்டனர். கடைசி 1 விக்கெட்டுக்கு 232 ரன்கள் அடித்த இந்த ஜோடி மும்பை அணியை 569 ரன்களுக்கு எடுத்துச்சென்றது.

துஷார் தேஷ்பாண்டே
“நீங்கள் தேடும் வீரர் நான்தான்”-விஹாரி பதிவுக்கு ரிப்ளை செய்த அரசியல்வாதி மகன்-தீவிரமாகும் விவகாரம்?

1946-க்கு பின் இரண்டாவது முறை நிகழ்ந்த வரலாற்று சம்பவம்!

முதல்தர கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 10வது மற்றும் 11வது வீரர் இருவரும் ஒரே இன்னிங்ஸில் சதமடிக்கும் சம்பவம், இது இரண்டாவது முறையாகும்.

முதலில் 1946ம் ஆண்டு சர்ரே மற்றும் இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல்தர போட்டியில், சந்து சர்வதே மற்றும் ஷுட் பானர்ஜி என்ற இரண்டு வீரர்கள் 10வது மற்றும் 11வது வீரராக இறங்கி ஒரே இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியிருந்தனர். இந்த அசாத்திய சாதனையை 78 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் கோட்டியன் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இரண்டு வீரர்களும் மீண்டும் நிகழ்த்தி காட்டியுள்ளனர்.

துஷார் தேஷ்பாண்டே
துஷார் தேஷ்பாண்டே

பிற சாதனைகள்..

* முதல்தர கிரிக்கெட்டில் 11வது வீரராக களமிறங்கி சதமடித்திருக்கும் 3வது வீரர் துஷார் தேஷ்பாண்டே

* சந்து சர்வதே மற்றும் ஷுட் பானர்ஜி இருவரின் கடைசி பார்ட்னர்ஷிப் ரன்களான 249 ரன்கள், 1992 ரஞ்சிகோப்பை அரையிறுதியில் சர்மா மற்றும் சிங் இருவரின் 233 ரன்களுக்கு பிறகு, கோட்டியன் மற்றும் தேஷ்பாண்டே இருவரும் 3வது முறையாக 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அடித்துள்ளனர்.

முஷீர் கான்
முஷீர் கான்cricinfo

துஷார் தேஷ்பாண்டேவின் இந்த ஆட்டத்தை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள், ”டேய் குமரா உனக்கு கிக்பாக்ஸிங் லாம் தெரியுமா” என்ற டெம்ப்ளேட்டின் கீழ் ”உனக்கு பேட்டிங் லாம் விளையாட வருமா தேஷ்பாண்டே” என்று டிரெண்ட் செய்துவருகின்றனர்.

2வது காலிறுதிபோட்டி டிராவான நிலையில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற மும்பை அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இரட்டை சதமடித்து அதற்கு காரணமாக அமைந்த முஷீர் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்கொள்ளவிருக்கிறது மும்பை அணி.

துஷார் தேஷ்பாண்டே
”தோனியின் தேர்வு தப்பாகுமா”! 300 ரன்கள் குவித்த 20 வயது CSK வீரர்! பறந்த 33 பவுண்டரி, 12 சிக்சர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com