இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெலுங்கானாவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மாநில அரசு அவருக்கு வழங்கிய பதவியை வெள்ளிக்கிழமையான இன்று டிஜிபி அலுவலகத்தில் ஏற்றுக்கொண்டார். இந்த நியமனம், நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காகவும், தெலுங்கானாவுக்கு பெருமை சேர்த்ததற்காகவும் சிராஜுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க கவுரவமாகும்.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என மொத்தமாக 89 போட்டிகளில் விளையாடியிருக்கும் முகமது சிராஜ், பல்வேறு மதிப்புமிக்க போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையைப் பெற்றுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் பங்கேற்றது அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
இந்தியா வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று ஆதிக்கம் செலுத்தியதற்கு முகமது சிராஜும் ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளார். மிக சமீபத்தில், 13 வருட காத்திருப்புக்குப் பின் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற முக்கியமான பங்கெடுப்பில் சிராஜும் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் தான் ஹைத்ராபாத்தை பிறப்பிடமாக கொண்ட முகமது சிராஜ், தெலுங்கானாவை பெருமை படுத்தியதற்காக டிஎஸ்பி பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் மட்டுமில்லாமல், இரண்டு முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீரர் நிகத் ஜரீனுக்கும் குரூப்-1 வேலைகளை தெலுங்கானா அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.