ஆசிய விளையாட்டுப் போட்டிகள், நான்கு வருடத்துக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. ஆசிய நாடுகளில் உள்ள வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில், கடந்த 2010, 2014 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட்டும் இடம் பெற்றிருந்தது. சர்வதேச போட்டிகளைக் காரணம் காட்டி, இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தp போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை.
கடந்த முறை (2018 ஆம் ஆண்டு) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. ஆனால், கிரிக்கெட்டை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த சீன ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அதில் 15 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. டி20 முறையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்க்க வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளை 2028 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் சேர்க்க அதிகாரபூர்வமாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், அக்டோபர் 16ஆம் தேதி மும்பையில் நடைபெறும் ஒலிம்பிக் சங்க கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் 141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் அக்டோபர் 15 முதல் 17 வரை நடைபெற உள்ளது. அப்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் முறையாக, கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளுக்கு ஒப்புதல் வழங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1900-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம்பிடித்தது. அதன் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.