ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிகவும் முக்கியமான போட்டியில் குஜராத் அணியை இன்று எதிர்கொள்கிறது. இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. மூன்றில் இரண்டையாவது கட்டாயம் வென்று ரன் ரேட்டில் அதிகம் இருந்தால் தான் பிளே ஆஃப்க்கு செல்ல முடியும். ஆனால், சென்னை அணி குறித்து வெளியாகும் தகவல்கள் வேறு மாதிரியாக இருக்கிறது.
சென்னை அணியில் பலர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். தோனி, தீபக் சாஹர் உள்ளிட்டோர் காயத்தால் அவதிப்பட்டு வருவது ரசிகர்களுக்கு பீப்பியை எகிற வைக்கிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங், தோனியின் காயம் குறித்து அவர் ஏன் 9 ஆவது இடத்தில் இறங்குகிறார் என்பது குறித்தும் முதல் முறையாக பேசினார்.
ஃபிளமிங் பேசுகையில், “தோனிக்கு தசை காயம் இருப்பதை இந்த சீசனின் தொடக்கத்திலேயே அறிந்தோம். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது. அப்படி செய்தல், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம். அது மிகவும் ஆபத்தானது. அதனால்தான், போட்டியில் 2-4 ஓவர்கள் பேட்டிங் மற்றும் முழுவதுமாக கீப்பிங் செய்து புதிய கேப்டனுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார். சிக்ஸர், பவுண்டரிகளை சிறப்பாகவே விளாசுகிறார். அதை தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
தோனிக்கு மாற்றாக வேறொரு கீப்பர் அணியில் உள்ளார். ஆனால், அவர் தோனி ஆகிவிட முடியாது. ஒன்பதாவது இடத்தில் தோனி களமிறங்குகிறார் என்பதாலேயே அவரால் போட்டியில் தாக்கம் ஏற்படுத்த முடியாது என நினைத்துவிடாதீர்கள். நாங்கள் கடைசி நேரத்தில் களமிறக்கி தோனியை பாதுகாக்க விரும்புகிறோம்” என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கடந்த சீசனை வழிநடத்திய தோனி 5ஆவது முறை கோப்பையையும் வென்று சாதனை படைத்தார். தொடர் முழுவதும் முழங்கால் காயத்தால் அவதிப்பட்டார். தொடர் முடிந்தது மும்பை சென்று பரிசோதனை மேற்கொண்ட அவர், முழங்கால் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி கடந்த போட்டியில் ஷர்துல் தாக்கூருக்கு பின்பு 9ஆவது இடத்தில் களமிறங்கியது, அதற்கு முந்தைய போட்டியில் மிட்செல்லை நிற்க வைத்து ரன் ஓடாமல் இருந்ததும் விமர்சனங்களை எழுப்பியது. இத்தகைய சூழலில் பயிற்சியாளர் ஃபிளமிங் முழுமையான விளக்கத்தை இன்று அளித்துள்ளார்.