மகளிர் அணிகளுக்கு இடையேயான 9-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 19 முதல் ஜூலை 28 வரை நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், “இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாள், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா மற்றும் தாய்லாந்து” முதலிய 8 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருப்பதில் A குரூப்பில், “இந்தியா, பாகிஸ்தான், நேபாள், ஐக்கிய அரபு அமீரகம்” முதலிய 4 அணிகளும், B குரூப்பில் “வங்கதேசம், இலங்கை, மலேசியா, தாய்லாந்து” முதலிய 4 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவுகளில் உள்ள ஒரு அணி மற்ற அணிகளுடன் மோதிக்கொள்ளும், அதாவது ஒவ்வொரு அணிகளும் 3 லீக் போட்டிகளில் விளையாடவிருக்கின்றன. பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும், முதல் அரையிறுதி போட்டியில் A1 மற்றும் B2 அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் B1 மற்றும் A2 அணிகளும் மோதிக்கொள்ளும். கோப்பைக்கான இறுதிப்போட்டி ஜூலை 28ம் தேதி இலங்கையில் உள்ள டம்புலா மைதானத்தில் நடைபெறும்.
இந்நிலையில் தங்களுடைய இரண்டாவது லீக் போட்டியில் மலேசியாவை எதிர்த்து விளையாடிய இலங்கை அணி, 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்துள்ளது.
மலேசியா அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சமாரி அத்தப்பட்டு 69 பந்துகளில் 14 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் உட்பட 119 ரன்கள் குவித்து அசத்தினார். அத்தப்பட்டுவின் உதவியால் 20 ஓவருக்கு 184 ரன்களை சேர்த்தது இலங்கை அணி.
2024 ஆசியக்கோப்பை போட்டியில் சதமடித்ததன் மூலம், ஆசியக்கோப்பை வரலாற்றில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார் சமாரி.
இலங்கையை தொடர்ந்து ஆடிய மலேசிய அணி 40 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.