மகளிர் டி20 உலகக் கோப்பை: “இதுவரையான இந்திய அணிகளிலேயே இந்த அணிதான் பலமானது” - கேப்டன் ஹர்மன்ப்ரீத்

இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிதான் இதுவரை டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற இந்திய அணிகளிலேயே பலமானது என்று சொல்லியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர்.
ஹர்மன்ப்ரீத் கௌர்
ஹர்மன்ப்ரீத் கௌர்pt desk
Published on

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள்:

2024 பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 3 முதல் 20 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. வங்கதேசத்தில் நடப்பதாக இருந்த இந்தத் தொடர், அங்கு நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இடம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிதான் இதுவரை டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகளிலேயே பலமானது என்று சொல்லியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர். மேலும், தான் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தன்னால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியிருக்கிறார் அவர்.

India team
India teampt desk

டி20 உலகக் கோப்பையில் மிகச் சிறந்த அணி இந்திய அணி:

ஐக்கிய அரபு அமீரகம் கிளம்புவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த ஹர்மன்ப்ரீத் கௌர், இந்திய அணியின் பலம் என்னவென்று கூறினார்.

அப்போது, "இந்த அணியைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், தொடர்ந்து எங்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் சில வீராங்கனைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்களின் ரோல்கள் என்னவென்று தெளிவாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரை இதுதான் டி20 உலகக் கோப்பையில் நம்முடைய மிகச் சிறந்த அணி என்று சொல்வேன்" என்றார் ஹர்மன்ப்ரீத்.

இந்திய அணியின் பௌலிங் யூனிட்:

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை மற்ற அணிகளோடு எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, "பூஜா வஸ்த்ரக்கர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ரேணுகா சிங் அவருக்கு நல்லபடியாக சப்போர்ட் கொடுக்கிறார். ரேணுகா எப்போதுமே எங்களுக்கு தொடக்கத்திலேயே எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கம் கொடுக்கிறார். அதேபோல் அருந்ததி ரெட்டியும் ஒருசில நல்ல ஓவர்கள் பந்துவீசுவதன் மூலம், தேவையான நேரத்தில் பேட்டிங் மூலமும் அணிக்குக் கைகொடுக்கிறார்.

அது அணியின் பேட்டிங் டெப்த்தையும் பலப்படுத்துகிறது. அதேசமயம் இந்திய பௌலிங் யூனிட்டை மற்ற அணிகளின் பௌலிங் யூனிட்டோடு நான் ஒப்பிட விரும்பவில்லை. ஒவ்வொரு அணிக்கும் அவர்களுக்கே உரிய பாசிடிவ்களும், நெகடிவ்களும் இருக்கின்றன. ஆனால் என்னுடைய அணி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். அவர்களால் என்ன செய்ய முடியும் என்றும் தெரியும்" என்று பதிலளித்தார் இந்திய கேப்டன்.

India team
India teampt desk

ஆசிய கோப்பை தொடரில் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் தொடரில் கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இறுதி போட்டியில் இலங்கையிடம் தோற்றது. அதுபற்றிப் பேசிய ஹர்மன்,

"ஆசிய கோப்பை தொடரில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டோம். அந்த மொத்த தொடரிலும் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடினோம் என்று சொல்வேன். அந்த ஒரே ஒரு நாள், அந்த ஒரே ஒரு ஆட்டம் நாங்கள் எதிர்பார்த்தபடி செல்லவில்லை. அதனால் நாங்கள் எதிர்பார்த்த முடிவு எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்கள் பயிற்சி முகாம்களில் பிரச்னைகளை எப்படி சரிசெய்வது என்பது பற்றி அமர்ந்து விவாதித்தோம். இந்த மாதிரியான சூழ்நிலை மீண்டும் வந்தால், அதை சமாளிக்க என்னென்ன விஷயங்களில் முன்னேற்றம் காணவேண்டும் என்பதைப் பற்றியும் விவாதித்துள்ளோம்" என்று கூறினார்.

“முதல் உலகக் கோப்பையை போலவே அதே உற்சாகத்தோடு இருக்கிறேன்”

தன்னுடைய உலகக் கோப்பை அனுபவங்கள் பற்றிப் பேசிய ஹர்மன், இன்னும் தன் முதல் உலகக் கோப்பையைப் போலவே அதே உற்சாகத்தோடு இருப்பதாகக் கூறினார்."நான் பல்வேறு உலகக் கோப்பைகளில் விளையாடியிருக்கிறேன். உலகக் கோப்பையில் சந்திக்கும் சூழ்நிலையோ, அங்கு கிடைக்கும் அனுபவமோ எந்தவொரு பைலேட்டரில் தொடர்களிலுமோ, வேறு எந்த தொடர்களிலுமே கிடைக்காத ஒன்று. 19 வயதில் நான் எவ்வளவு உற்சாகத்தோடு உலகக் கோப்பை அரங்கில் கால் வைத்தானோ அதுபோலத்தான் இப்போதும் உணர்கிறேன். இப்போது என்னுடைய அனுபவத்தையும் உடன் எடுத்துச் செல்கிறேன்.

“ஒவ்வொருவரும் சுதந்திரமாக தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்”

உலகக் கோப்பைத் தொடரில் நெருக்கடி அதிகமாக இருக்கும் என்று தெரியும். அதை நான் எப்படி கையாளவேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். ஒவ்வொருவரும் சுதந்திரமாக தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். முடிவுகளைப் பற்றி யோசிக்காமல் அவர்கள் தங்கள் ஆட்டத்தை ஆடுவது முக்கியம். ஆனால் அங்கு களமிறங்கி என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது என்னால் பல விஷயங்களை மாற்ற முடியும் என்று எனக்கு நன்கு தெரியும்" என்று கூறினார் அவர்.

இந்த தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி அக்டோபர் 4ம் தேதி துபாயில் நடக்கிறது. இந்திய அணியின் பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. இப்பிரிவில் முதலிரு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com