இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
விசாகப்பட்டிணத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தி இருந்தார். இந்த போட்டியில் பந்துவீச்சில் அசத்திய பும்ரா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் என மொத்தமாக 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஆட்டநாயகனாகவும் பும்ரா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே பும்ரா உடனான உரையாடலின் போது, இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு நன்மை பயக்கும் என்ற போதிலும், இந்தியாவில் பும்ராவின் சாதனைகள் குறித்தும் புள்ளிவிவரங்கள் குறித்தும் அவருக்கு சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து பேசிய பும்ரா, “நான் முன்பே கூறியது போல், நான் புள்ளிவிவரங்களை கருத்தில் கொள்வதில்லை. நான் இளைஞனாக இருந்தபோது அதை செய்தேன். அப்போது அது என்னை உற்சாகப்படுத்தியது. ஆனால் இப்போதோ அது கூடுதல் சுமை. அணிக்கு என்னால் முடிந்தவரை எந்த வகையிலாவது உதவவேண்டும். அதுவே என் பொறுப்பு என்பதை நான் உணர்கிறேன்” என தெரிவித்தார்.
ஆண்டர்சன் உடனான போட்டி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “இல்லை அது உண்மையல்ல. கிரிக்கெட்டராக ஆவதற்கு முன்பாகவே நான் வேகப்பந்து வீச்சின் ரசிகன். யாராவது சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு என் பாராட்டுகள். நான் அந்த சூழலைப் பொறுத்தும் ஆடுகளத்தைப் பொறுத்தும் என்னுடைய பந்துவீச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதை யோசிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இவ்விரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கான 3வது டெஸ்ட் போட்டி, வரும் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.