2023 உலகக் கோப்பையில் வாழ்க்கையின் சிறந்த ஃபார்மில் ஜொலித்த விராட் கோலி, 11 போட்டிகளில் விளையாடி 95.62 சராசரியில் 765 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். அதுமட்டுமல்லாமல் 50 ODI சதங்களை எட்டி சச்சினின் உலகசாதனையை முறியடித்த அவர், ஒரு உலகக் கோப்பைப் பதிப்பில் அதிக ரன்களை பதிவுசெய்து உலகத்திற்கே முன்மாதிரி கிரிக்கெட்டராக ஜொலித்தார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் பிரையன் லாரா, விராட் கோலியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அவரைப் பாராட்டினார். மேலும் தனது சந்ததியினர் விளையாட்டு துறையை தொடர விரும்பினால், அவர்களிடம் விராட் கோலியை பின்பற்றும்படி கூறவிரும்புகிறேன் என்று புகழாரம் சூட்டினார்.
விராட் கோலியின் கிரிக்கெட் அர்ப்பணிப்பை புகழ்ந்து பேசிய பிரையன் லாரா, அவர் கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றிவிட்டார் என்று கூறினார். அவர் பேசுகையில், "எனக்கு ஒரு மகன் இருக்கிறான், என் மகன் ஏதேனும் விளையாட்டில் விளையாட வேண்டும் என்றால், நான் கோலியின் அர்ப்பணிப்பையும், நேர்மையையும் பின்பற்றும்படி கூறுவேன். கோலியை போன்று தனிப்பட்ட சாதனைகளை மட்டும் வலுப்படுத்த விளையாடாமல், அணிக்காக விளையாடி எப்படி நம்பர் ஒன் ஸ்போர்ட்ஸ்மேனாக உருவாக வேண்டும் என்னும் அர்ப்பணிப்பை பின்பற்றுங்கள் என கூறுவேன்” என்று புகழ்ந்து பேசினார்.
மேலும், ”விராட் கோலியைப் பொறுத்தவரை, இந்தியா உலகக் கோப்பையை வெல்லாத போது கோலியின் சிறந்த ஆட்டம் ஒரு பொருட்டல்ல என்று பலர் சொல்வார்கள். அவ்வளவு ஏன்.. ஒரு சிலர் ‘அவர் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுவார்’ என்று கூட கூறுவார்கள். இவர்களெல்லாம் அணியின் வெற்றியே ஒரு தனிநபர் வெற்றியின் துணையால்தானே சாத்தியமாகும் என்பதை மறந்துவிடுகிறார்கள்” என்று லாரா கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கோள் காட்டியுள்ளது.
தொடர்ந்து விராட் கோலியின் தலைசிறந்த ஆட்டத்தை விவரித்த லாரா, தன்னை மறந்து மனம் திறந்து கோலியை பாராட்டினார். அப்போது, “விராட் கோலியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய உண்மையான மரபுதான். அவர் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியிருக்கிறார். நீங்கள் எப்படி விளையாட்டிற்கு தயாராகிறீர்கள் என்பதில் விராட் கோலியின் ஒழுக்கம் தனித்து நிற்கிறது” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் ப்ரைன் லாரா.