அதிகம் டெஸ்ட் விளையாடாத ஏதோ சாதாரண அணிக்கு எதிராகவெல்லாம் இல்லை, ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் 400 ரன்களுடன் நாட்அவுட் என்ற வரலாற்று சம்பவம் செய்தது உலக சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான்.
778 நிமிடங்கள் களத்தில் நிலைத்து நின்று 43 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 400 ரன்கள் நாட் அவுட் என விளையாடிய போது, இங்கிலாந்து அணியில் மேத்யூ ஹோக்கர்டு, ஸ்டீவ் ஹர்மிஸ்ஸன், ஆண்ட்ரோ பிளிண்டாஃப் என தலைசிறந்த பவுலர்கள் இருந்தனர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மேத்யூ ஹைடன் அடித்த 385 ரன்கள் சாதனையை, இங்கிலாந்து அணிக்கு எதிராக 400 ரன்கள் அடித்து சம்பவம் செய்த பிரையன் லாரா, 20 வருடங்களாக உடைக்க முடியாமல் இருந்துவரும் தன்னுடைய சாதனையை இரண்டு இளம் இந்திய வீரர்களால் உடைக்க முடியும் என்று கூறியுள்ளார்.
400 ரன்கள் என்ற இமாலய சாதனை குறித்து தி டெய்லி மெய்லுடன் பேசியிருக்கும் லாரா, “எனது காலகட்டத்தில் 400 ரன்கள் சாதனையை உடைக்குமளவு சவால் விட்ட அல்லது குறைந்த பட்சம் 300 ரன்களைக் கடந்த வீரர்கள் இருந்தனர். அதில் வீரேந்திர சேவாக், கிறிஸ் கெய்ல், இன்சமாம்-உல்-ஹக், சனத் ஜெயசூர்யா போன்ற வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமான வீரர்களாக இருந்தனர்.
ஆனால் தற்போது எத்தனை ஆக்ரோஷமான வீரர்கள் விளையாடுகிறார்கள்? என்று பாருங்கள், குறிப்பாக இங்கிலாந்து அணியில் சாக் க்ராலி மற்றும் ஹாரி புரூக் முதலிய வீரர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை இந்திய அணியில்? யாராவது முறியடிப்பார்களானால் அது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மான் கில். இந்த இரண்டு வீரர்களுக்கும் சரியான சூழ்நிலை அமைந்தால், அவர்களால் என் சாதனையை முறியடிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 400 ரன்கள் நாட் அவுட் மட்டுமில்லாமல், கவுண்ட்டி கிரிக்கெட்டில் 501 ரன்கள் நாட் அவுட் என அடித்திருக்கும் பிரையன் லாரா, இரண்டுமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை படைத்தார். முதலில் 365 ரன்களை உடைத்த அவர், அதற்குபிறகு 385 ரன்களை உடைத்து சாதனை படைத்தார். கடைசியாக ஒரு வீரர் 350 ரன்களை கடந்தது 2006ம் ஆண்டில் மஹிலா ஜெயவர்தனே 374 அடித்ததே கடைசியாக இருந்துவருகிறது.