செய்தியாளர் இர்ஃபாத்
டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சபட்சமாக பார்க்கப்படும் ஆஷஸ் தொடருக்கு இணையாக இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை பார்ப்பதாக ஆஸ்திரேலிய வீரரான மிட்செல் ஸ்டார்க் கூறியிருக்கிறார். இதற்கு வணிகம் மட்டுமே ஒரே காரணம் கிடையாது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை என்கிற ஆஸ்திரேலியாவின் ஆதங்கமும் முக்கிய காரணம்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதக்கூடிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. 5 போட்டிகளை கொண்ட இந்த தொடர் ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தொடர் 1996 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 16 பார்டர் கவாஸ்கர் தொடர் நடத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 10 முறை இந்தியாவும் 5 முறை ஆஸ்திரேலியாவும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு தொடர் சமநிலையில் முடிந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்பது 1947 ஆம் ஆண்டு முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. முதன்முதலில் இந்திய அணி 1947 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரில் 0-4 என இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தாலும் உலகளவில் பிரபலமான சர்ச்சைக்குரிய மன்கட் ரன் அவுட் முறை இந்த தொடரில்தான் முதலில் மேற்கொள்ளப்பட்டது. இந்திய வீரர் வினோ மன்கட் ஆஸ்திரேலிய வீரர் பில்லி பிரவுனை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அன்றில் இருந்து இன்று வரை சர்ச்சைக்கு உள்ளான இந்த ரன் அவுட் முறைக்கு இந்திய வீரர் மன்கட் பெயர் வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் போது கிடைத்தது. கவாஸ்கர், மொகிந்தர் அமர்நாத் போன்ற தலைசிறந்த வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 222 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இருப்பினும் தொடரில் இந்தியா 3-2 என்கிற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணி பல டெஸ்ட் வெற்றிகளை பெற்றாலும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியவில்லை என்கிற ஏக்கம் பல ஆண்டுகளாக நீடித்தது. அந்த ஏக்கத்தை போக்கிய இந்திய கேப்டன் விராட் கோலி.
2018 - 2019 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை விராட் கோலி பயன்படுத்திய விதம், அவருடைய பேட்டிங் மற்றும் தலைமை பண்பு ஆஸ்திரேலியர்களையே திரும்பி பார்க்க வைத்தது. அதன் வெளிப்பாடுதான் கடந்த ஒரு மாதமாக அனைத்து ஆஸ்திரேலிய பத்திரிகைகளும் விராட் கோலி வருகையை கொண்டாடி வருகின்றன.
இந்த வெற்றியை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி பின்னர் மீண்டு வந்து தொடரை கைப்பற்றியது இந்திய ரசிகர்களின் மனதில் இப்போதும் நீங்கா நினைவுகளைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கும் டெஸ்ட் தொடர் இந்திய அணியில் உள்ள பல சீனியர் வீரர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் கடைசி டெஸ்ட் தொடராக இருக்க வாய்ப்புள்ள நிலையில் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.