ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 தொடரானது பிக் பாஷ் லீக் தொடர். 2023-2024ஆம் ஆண்டுக்கான பிக்பாஷ் லீக் டி20 தொடர் டிசம்பர் 7-ம் தேதிமுதல் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 4வது லீக் போட்டியானது மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆனால் போட்டி தொடங்கி 6.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையிலேயே மோசமான ஆடுகளத்தால் ரத்து செய்யப்பட்டது.
மெல்போர்ன் ஜீலாங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. போட்டி தொடங்கிய ஆரம்ப நேரத்தில் ஆடுகளம் எப்போதும் போலவே செயல்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில், தொடக்க வீரர் ஸ்டீபன் எஸ்கினாசி இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான கூப்பர் கன்னோலியும் 6 ரன்னில் நடையை கட்ட 18 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெர்த் அணி.
அதற்கு பிறகு கைக்கோர்த்த ஜோஸ் இங்கிலீஸ் மற்றும் ஆரோன் ஹார்டி இருவரும் பேட்டிங் செய்தனர். அதுவரை சில பந்துகள் மட்டுமே பவுன்சாகி சென்ற நிலையில், தீடீரென சில பந்துகள் விக்கெட் கீப்பர் தலைக்கு மேலாகவும், பேட்ஸ்மேன்களின் முகத்திற்கு நேராகவும் எகிறி சென்றன. சீரான வேகத்தில் இது நடந்தாலும் பரவாயில்லை, எந்த பந்து எப்போது முகத்திற்கு எகிரும் என்று பயப்படும் நிலைக்கே சென்றது.
அப்போது தான் போட்டியின் ஏழாவது ஓவரை மெல்போர்ன் அணியின் வேகப் பந்துவீச்சாளர் வில் சதர்லேண்ட் வீசினார். அவர் வீசிய பந்து ஜோஸ் இங்கிலீஸின் தலைக்கு நேராக எகிறி சென்றது. ஒரு பந்து மண்ணை பெயர்த்து கொண்டு சென்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆடுகளத்தில் மழைபெய்ததால் இது நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் 7வது ஓவரின் 5வது பந்து மண்ணை பெயர்த்து அதிகமாக பவுன்சாகி சென்றது. விக்கெட் கீப்பர் டி காக் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வாய் மீது கைவைத்து ஆடுகளத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.
பின்னர் பேட்டிங் செய்த ஹார்டி தாமதிக்காமல் போட்டி நடுவரிடம் சென்று பேசினார். ஒரு பெரிய உரையாடலுக்கு பிறகு ஆடுகளத்தில் பாதுகாப்பின்மை என்ற காரணத்தால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய போட்டி நடுவர், “ஆட்டம் தொடங்கும் போது ஆடுகளம் நன்றாகவே செயல்படும் என்று நாங்கள் நம்பினோம். முதல் சில ஓவர்களில் பந்து பெரிதாகச் செயல்படவில்லை, ஆனால் திடீரென்று அது உயரத் தொடங்கியது தொடர்ந்து ஆடுகளத்தில் அதீத பவுன்சர் இருந்ததால் இது ஆபத்தானது என்று கருதப்பட்டது” என்று கூறினார்.
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் இந்த முடிவைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் லீக்கில் ஆபத்தான ஆடுகளத்தை தயார் செய்ததற்காக அதிகாரிகளை சாடினார்.