2023ம் ஆண்டு முடிவுக்கு வந்திருக்கிறது. உலகக் கோப்பை உள்பட பல முக்கிய ஒருநாள் தொடர்களை இந்த ஆண்டு கண்டிருக்கிறோம். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டிருக்கும் சிறந்த 11 வீரர்களை வைத்து ஒரு அணியை உருவாக்கியிருக்கிறோம்.
தன் அதிரடி ஆட்டத்தால் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கு மிகச் சிறந்த தொடக்கங்களை ஏற்படுத்திக் கொடுத்தார் ரோஹித் ஷர்மா. பவர்பிளேவிலேயே எதிரணிகளை நிலைகுலையச் செய்த அவர், பெரிய இன்னிங்ஸ்களும் ஆடி மிரட்டினார். இந்த ஆண்டு மட்டும் 2 சதங்கள், 9 அரைசதங்கள் உள்பட 1255 ரன்கள் விளாசினார் ஹிட்மேன். அதுவும் 52.29 என்ற சூப்பரான சராசரியில். ஹிட்மேன் என்ற தனது பெயருக்கு ஏற்றார்போல 67 சிக்ஸர்களும் விளாசியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசியவர் கில் தான். 1500 ரன்களைக் கடந்த ஒரே வீரரும் அவர்தான். 29 போட்டிகளில் விளையாடிய அவர் 63.36 என்ற சராசரியில் 1584 ரன்கள் விளாசினார். அதிலும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இரட்டைச் சதம் அடித்து மிரட்டினார் கில். உலகக் கோப்பையின் தொடக்கத்தை உடல் நலக் குறைவால் தவறவிட்டிருந்தாலும், அதன்பிறகு வந்து தன் அசத்தல் ஆட்டத்தைத் தொடர்ந்தார். இந்த ஆண்டு மட்டும் 5 சதங்கள் அடித்திருக்கிறார் கில்.
உலக கிரிக்கெட்டின் ராஜா மீண்டும் தன் அரியாசணத்தில் ஏறியிருக்கிறார். உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்று அசத்திய கிங் கோலி, இந்த ஆண்டு 72.47 என்ற சராசரியில் 1377 ரன்கள் விளாசினார். வழக்கம்போல் பல போட்டிகளில் தனி ஆளாக தன் வழக்கமான ஆட்டத்தை ஆடி இந்திய அணிக்கு நம்பிக்கையாக விளங்கினார். 6 சதங்கள் அடித்த விராட், கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து 50வது ஒருநாள் சதத்தையும் நிறைவு செய்தார்.
உலகக் கோப்பையில் ஆடவில்லை என்பதால் ஷாய் ஹோப்பின் சிறப்பான ஆட்டம் பற்றி பேசாமல் இருந்துவிட முடியாது. 17 போட்டிகளில் ஆடிய ஹோப், 68.66 என்ற சராசரியில் 824 ரன்கள் விளாசினார். அதுவும் சுமார் 100 ஸ்டிரைக் ரேட்டில். எப்போதும் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ் அணியை மீட்பதே அவருடைய வேலையாக இருந்திருக்கிறது. அதையும் இந்த ஆண்டும் தொடர்ந்து செய்திருக்கிறார் அவர்.
52.34 என்ற சராசரியில் இந்த ஆண்டு மட்டும் 1204 ரன்கள் குவித்திருக்கிறார் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல். ஸ்பின், வேகம் என இரண்டையும் சரிசம அளவில் சிறப்பாகக் கையாள்கிறார். இந்தியாவுக்கு எதிரான இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலுமே சதமடித்து அசத்தினார் அவர். அணி தடுமாறும்போது நிலைத்து நின்று மீட்டெடுக்கும் அவர், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி ஆட்டத்தின் போக்கையும் மாற்றுகிறார். 100.24 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவ்வளவு ரன்கள் குவித்திருப்பது சாதாரண விஷயம் இல்லையே!
டி20, ஒருநாள் என எந்த ஃபார்மட்டாக இருந்தாலும் தன் இருப்பாலேயே எதிரணிகளை மிரள வைத்துவிடுகிறார் கிளாசன். மிடில் ஓவர்களில் தன் அணியின் ரன்ரேட்டை பன்மடங்கு அதிகப்படுத்தும் அவர், டெத் ஓவர்களிலோ அடுத்த கட்டத்தை அடைந்துவிடுகிறார். சுமார் 140 ஸ்டிரைக் ரேட்டில் 927 ரன்கள் விளாசியிருக்கும் கிளாசன், ரோஹித்துக்கு அடுத்தபடியாக 44 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். மிடில் ஆர்டர் ஸ்லாட்டில் கிளாசனை விட சிறந்தவொரு ஹிட்டர் இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இல்லை.
ஆல் ரவுண்டருக்கான ஸ்லாட்டுக்கு தென்னாப்பிரிக்காவின் மார்கோ யான்சன், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடையே சரிசம போட்டி நிலவும். இருவருமே இரண்டு ஏரியாவிலும் ஓரளவு நல்ல செயல்பாடுகளைக் கொடுத்திருக்கிறார்கள். யான்சன் 406 ரன்கள் எடுத்ததோடு 33 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். ஜடேஜாவோ 309 ரன்கள் எடுத்ததோடு 31 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். இரண்டாவது ஸ்பின்னர் அவசியம் என்பதால் யான்சனை முந்தி இந்த ஸ்லாட்டை தனதாக்குகிறார் ஜடேஜா.
பல போட்டிகளில் பாகிஸ்தான் அணி தடுமாறிய போதெல்லாம் அஃப்ரிடி தான் நம்பிக்கையாக இருந்திருக்கிறார். இந்த ஆண்டு 21 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒவ்வொரு 26 பந்துக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தும் அஃப்ரிடி இந்த அணிக்கு இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்ற இன்னொரு டைமன்ஷனும் கொடுக்கிறார்.
2023ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டின் டாப் விக்கெட் டேக்கர். 30 போட்டிகளில் 49 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் குல்தீப் யாதவ். ஒவ்வொரு 27 பந்துக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கும் அவர், மிகவும் சிக்கனமாகவும் பந்துவீசியிருக்கிறார். ஓவருக்கு 4.61 ரன்கள் வீதமே விட்டுக்கொடுத்திருக்கும் அவர், இந்த ஆண்டு மிகச் சிறந்த ஸ்பின்னராகத் திகழ்ந்திருக்கிறார்.
இந்த உலகக் கோப்பையில் அவர் ஆடிய ஆட்டம் மிகச் சிறந்த உலகக் கோப்பை செயல்பாடுகளுள் ஒன்று. விளையாடிய 19 போட்டிகளில் 43 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டியிருக்கிறார் அவர். அதிலும் 4 போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளோ அதற்கு மேலோ கைப்பற்றி அசத்தியிருக்கிறார். இந்த ஆண்டின் மிகச் சிறந்த ODI பௌலர் ஷமி தான் என்று அடித்து சொல்லலாம்.
ஜஸ்ப்ரித் பும்ராவை இந்த அணியில் சேர்க்காதது சாதாரண விஷயம் இல்லை. ஒரு மகத்தான உலகக் கோப்பை செயல்பாட்டைக் காட்டியிருக்கிறார். ஆனால் இது ஆண்டுக்கான அணி ஆயிற்றே. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு அவர் 28 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். ஆனால் அதற்காக 44 விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜை ஒதுக்கிவிட முடியாதே. அந்த ஆசிய கோப்பை ஃபைனல் போல பல அற்புதமான செயல்பாடுகளை இந்த ஆண்டு கொடுத்திருக்கிறார் சிராஜ். ஆண்டு முழுதும் சிறப்பாக செயல்பட்டிருப்பதால், பும்ராவை முந்துகிறார் அவர்.