ஆண்டுதோறும் பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர், இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது. 10 அணிகள் இடம்பெற்று விளையாடும் இத்தொடரில், ஒவ்வோர் அணிகளுக்கும் எண்ணற்ற ரசிகர் பட்டாளம் உள்ளது. இதன் காரணமாகவே வருடந்தோறும் ஐபிஎல் தொடர் மேலும் மேலும் மெருகேறி வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ சுமார் 5,120 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது. இந்த தொகை, ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆண்டில் மட்டும் கிடைத்த மிகப்பெரிய லாபமாகும். இன்னும் சொல்லப்போனால், ஒட்டுமொத்தமாகக் கிடைத்த வருமானத்தில் செலவு போக லாபம் மட்டுமே இந்த தொகை ஆகும்.
இதற்கு முன்பு, கடந்த 2022 ஐபிஎல் தொடரில் பிசிசிஐக்கு 2,367 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்திருந்தது. தற்போது, அதைக் காட்டிலும் 116 சதவீதம் அதிக லாபத்தை, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர்மூலம் பிசிசிஐ பெற்றுள்ளது. 2022 ஐபிஎல் தொடரில் ஓராண்டு ஒளிபரப்பு உரிமத்தின் மதிப்பு 3,780 கோடியாக இருந்தது. ஆனால், 2023 ஐபிஎல் தொடரில் ஓராண்டு ஒளிபரப்பு உரிமம் 8,744 கோடியாக அதிகரித்தது. இதன்மூலம் 2023 ஐபிஎல் தொடரில் பிசிசிஐ 11,769 கோடி வருவாய் ஈட்டியது.
அதேசமயம், ஐபிஎல் தொடரின் செலவுகளும் அதிகரித்தன. என்றாலும், 2023 ஐபிஎல் தொடரை நடத்த 6,648 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது போக, மீதி 5,120 கோடி ரூபாய் பிசிசிஐக்கு லாபம் கிடைத்துள்ளது. அதேபோல, மகளிர் பிரிமியர் லீக் போட்டிகள் மூலம் பிசிசிஐக்கு கூடுதலாக, 377 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மொத்தமாக ஊடக ஒளிபரப்பு உரிமம், அணி உரிமை கட்டணம் ஆகியவற்றின் மூலம் 636 கோடி ரூபாய் பிசிசிஐக்கு வருமானமாகக் கிடைத்துள்ளது.
பிசிசிஐ இந்த அளவுக்கு லாபம் பெறுவதற்கு முக்கியக் காரணமே, ஒளிபரப்பு உரிமம் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள்தான். 2022 ஐபிஎல் தொடருடன், அதற்குமுன்பு போடப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அந்த வகையில், இந்தமுறை தொலைக்காட்சி உரிமம் தனியாகவும், இணையதளம் மற்றும் செல்போன் ஒளிபரப்பும் ஸ்ட்ரீமிங் உரிமம் தனியாகவும் விற்கப்பட்டன. அதன்படி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் 23,575 கோடி ரூபாய்க்கும், ஸ்ட்ரீமிங் உரிமத்தை ஜியோ சினிமா 23,758 கோடி ரூபாய்க்கும் வாங்கின.
ஐந்து ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தில் 2027ஆம் ஆண்டு வரை, டிஸ்னி மற்றும் ஜியோ சினிமா நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக 48,390 கோடி ரூபாய் அளிக்க முன்வந்தன. அதேபோல ஐபிஎல் பெயருக்கான விளம்பர ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றது. அந்த நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு 2,500 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தது. இதை தவிர்த்து, MyCircle11, RuPay, AngelOne மற்றும் Ceat போன்ற நிறுவனங்கள் 1,485 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பாகச் செயல்பட்டு வரும் பிசிசிஐ, 16,493.2 கோடி ரூபாயை வங்கி கையிருப்பாக வைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் இந்த தொகை 10,991.29 கோடி ரூபாயாக இருந்தது. இத்தகைய வலுவான நிதிச் செயல்பாட்டால் பிசிசிஐ, உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் எதிர்கால சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சிக்கலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.