BCCI விருதுகள் வழங்கும் விழாவானது கோவிட் தொற்றால் 2019-ம் ஆண்டுக்கு பிறகு நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற பிசிசிஐ விருதுகள் 2024 விழாவில், இந்திய முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டருமான ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனைக்கான சிகே நாயுடு விருது வழங்கப்பட்டது. அதேபோல முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான பரோக் இன்ஜினியருக்கும் வாழ்நாள் சாதனைக்கான சிகே நாயுடு விருது வழங்கப்பட்டது. இவ்விருதுகளை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் சேர்ந்து ரவி சாஸ்திரி மற்றும் பரோக் இன்ஜினியருக்கு வழங்கி கௌரவித்தனர்.
இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்களில் ஒருவரான ரவி சாஸ்திரி, இந்தியாவுக்காக 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 15 சதங்கள் உட்பட 6938 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் கலக்கிய அவர், இந்தியாவுக்காக 280 விக்கெட்டுகளை தன்வசம் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 1983ல் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியும், 1985 சாம்பியன்ஸ் டிரோபி வெற்றியிலும் ஒரு அங்கமாக இருந்துள்ளார்.
இரண்டு முறை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இவர் இருந்த சமயத்தில், இந்திய அணி செனா நாடுகளில் டெஸ்ட் தொடர்களை வென்று ஆதிக்கம் செலுத்தியது. இரண்டு முறை ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து தோற்கடித்தது. அதுமட்டுமல்லாமல் உலகத்தின் சிறந்த டெஸ்ட் அணியாக நீண்டநாள் இந்தியா நீடித்தது. மேலும் அவருடைய தலைமை பயிற்சியாளர் தலைமையின் கீழ் 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது.
85 வயாதான பரோக் இன்ஜினியர் இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக 1961-1975 வரை விளையாடினார். 335 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 13 சதங்கள் மற்றும் 69 அரைசதங்களுடன் 13,436 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச அரங்கில் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 16 அரைசதங்கள் அடித்துள்ள அவர், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.