ஆசிய அணிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை தொடர் டிசம்பர் 8ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்தது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாள், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் முதலிய 8 அணிகள் பங்குபெற்று விளையாடின.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் A பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், B பிரிவில் இருந்து வங்கதேசம் மற்றும் UAE அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், நடந்துமுடிந்த அரையிறுதிப்போட்டிகளில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணியும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக பாகிஸ்தான் அணியும் படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில் முதல்முறையாக இறுதிப்போட்டியில் வங்கதேசம் மற்றும் யுஏஇ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ஷிப்லி 12 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அவருடன் சேர்ந்து மிடில் ஆர்டர் வீரர்களான ரிஸ்வான் மற்றும் இஸ்லாம் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்த, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்த வங்கதேசம் 282 ரன்களை குவித்தது.
283 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணி, வங்கதேசத்தின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அனைத்து வங்கதேச வீரர்களும் 2, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்த, ஒரு யுஏஇ வீரர்கள் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 8 யுஏஇ வீரர்கள் ஓரிலக்க ரன்களில் வெளியேற, 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் யுஏஇ அணியை 185 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணி முதல்முறையாக யு19 ஆசியக்கோப்பையை வென்று அசத்தியது.