வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-1 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை அணி. டி20 தொடரை வென்ற பிறகு ‘டைம் அவுட்’ செலப்ரேசனை வெளிப்படுத்திய இலங்கை அணி, வங்கதேச அணியை வெறுப்பேற்றியது.
அதற்கு பிறகு நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று வெற்றிபெற்ற வங்கதேச அணி, இலங்கை அணியை வெறுப்பேற்றும் வகையில் ‘ஹெல்மெட்’ செலப்ரேசன் செய்து பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது.
சட்டோகிராம் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது. முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள், நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட் 96 ரன்களுக்கு விழுந்தாலும், அதற்கு பிறகு கைக்கோர்த்த கருணரத்னே மற்றும் குசால் மெண்டீஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கருணரத்னே 86 ரன்களும், குசால் மெண்டீஸ் 93 ரன்களும் அடிக்க முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் குவித்துள்ளது இலங்கை அணி.
இந்நிலையில் முதல் நாள் போட்டியில் குசால் மெண்டீஸுக்கு எதிராக வங்கதேச கேப்டன் நஜ்முல் ஷாண்டோ எடுத்த ரிவ்யூ சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. போட்டியின் 44-வது ஓவரில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் வீசிய பந்தை எதிர்கொண்ட குசால் மெண்டிஸ் சிறப்பான தடுப்பாட்டம் மூலம் தடுத்து நிறுத்தினார். ஆனால் ‘ஸ்லிப்பில் நின்றிருந்த கேப்டன் ஷாண்டோ பந்துவீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பரிடம் LBW விக்கெட்டா?’ என கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் ஃபீல்டர்கள் யாரும் உறுதியாக பேட்டில் பட்டது என்று சொல்லாததால் வங்கதேச கேப்டன் DRS-க்கு சென்றார்.
ஷாண்டோவின் அந்த முடிவு கள நடுவர் ராட் டக்கருக்கு மட்டுமில்லாமல் இலங்கை ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிஆர்எஸ் காட்சிப்பதிவில் பந்தானது மெண்டிஸ் பேட்டின் நடுப்பகுதியில் வசதியாக பட்ட சென்றது தெரிந்தது. பேட்ஸ்மேனின் கால்களிலோ, லெக்பேடிலோ எதிலும் பந்து படவில்லை என்பதால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. வங்கதேச கேப்டனின் இந்த ரிவ்யூ “எப்போதும் மோசமான ரிவ்யூ” என்று ரசிகர்களால் அதிகப்படியாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
வங்கதேசம் அணியானது இப்படிப்பட்ட மோசமான DRS ரிவ்யூ எடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, அப்போதைய கேப்டன் முஸ்பிகூர் ரஹிம் விராட் கோலிக்கு எதிராக இதேபோன்ற வினோதமான மறுஆய்வு முடிவை எடுத்தார். இதேபவுலர் தைஜுல் இஸ்லாமுக்கு எதிராக சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி பந்தை வசதியாக தடுத்து நிறுத்தினார்.
ஆனால் விக்கெட் கீப்பிங்கில் இருந்த முஷ்பிகுர் ரஹிம் கோலிக்கு எதிராக ரிவியூக்கு சென்றார். அந்த முடிவு வர்ணனையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ரீப்ளே செய்ததில் கோலியின் பேட்டின் நடுவில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. அந்த ரீப்ளேவை பார்த்த பிறகு விராட் கோலி சிரிக்கவே ஆரம்பித்துவிட்டார். அதேபோன்ற நிகழ்வை மீண்டும் நிகழ்த்தி காட்டி மீண்டும் ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது வங்கதேசம்.