நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் தொடங்கி நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி நியூசிலாந்து 44 ரன்களில் வெற்றிப்பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நியூசிலாந்தின் சக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.
முதலில் விளையாடிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். தொடக்க வீரர் அனமுல் 2 ரன்னிலும், கேப்டன் ஷாண்ட்டோ 6 ரன்னிலும், லிட்டன் தாஸ் 6 ரன்னிலும் நடையை கட்ட வங்கதேச அணி 44 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நான்காவது விக்கெட்டுக்கு சௌமியா சர்கார் மற்றும் தௌகித் இருவரும் ஜோடி சேர, தௌகித்தை மறுமுனையில் நிற்கவைத்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சௌமியா ஓரளவு ரன்களை போர்டில் போட்டார். ஆனால் அதிகநேரம் இந்த ஜோடியை நிலைக்க விடாத நியூசிலாந்து அணி 80ரன்னில் 4 விக்கெட்டையும் எடுத்துவந்தது.
5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சௌமியா மற்றும் மூத்த வீரர் முஸ்ஃபிகூர் ரஹிம் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபக்கம் ரஹிம் நிதானம் காட்ட, தொடக்கத்தில் இருந்து களத்தில் நிலைத்து நின்ற சௌமியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 100 ரன்கள் பார்டன்ர்ஷிப்பை நோக்கி நகர்ந்த இந்த ஜோடியை ரஹிமை 45 ரன்னில் வெளியேற்றி பிரித்துவைத்தார் டஃப்பி. என்ன தான் ரஹிம் வெளியேறினாலும் தனியொரு ஆளாக இறுதிவரை போராடிய சௌமியா சர்கார் சதமடித்து அசத்தினார். வெறும் சதத்தோடு மட்டும் நிறுத்தாத அவர், சதமடித்த பிறகு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 151 பந்துகளில் 22 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த சௌமியா சர்கார், 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரின் அபாரமான சதத்திற்கு பிறகு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 291 ரன்களை மட்டுமே சேர்த்தது.
292 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில், சொந்த மைதானத்தை பயன்படுத்தி வில் யங் (89 ரன்கள்), ரச்சின் ரவிந்திரா (45), ஹென்றி நிக்கோலஸ் (95 ரன்கள்) அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. சௌமியா சர்காரின் சதம் வீணாய் போனது.
நியூசிலாந்துக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் 169 ரன்களை குவித்த சௌமியா சர்கார், சச்சின் டெண்டுல்கரின் 14 வருட சாதனையை முறியடித்துள்ளார். 2009ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம்பெற்ற சச்சின் டெண்டுல்கர், கிறிஸ்துசர்ச் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 163 ரன்கள் குவித்திருந்தார்.
அன்றைய போட்டியில் அவர் அடித்த அந்த ரன்களே சப்-காண்டினன்ட்டை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் நியூசிலாந்து மண்ணில் பதிவுசெய்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்களை குவித்தது. சச்சின் டெண்டுல்கர் 163 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் மட்டுமே வெளியேறினார். இல்லையென்றால் சச்சின் டெண்டுல்கரின் முதல் இரட்டை சதத்தை நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் உலகம் பார்த்திருக்கும். அப்படியொரு அற்புதமான சச்சின் டெண்டுலரின் ஆட்டத்தை நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானம் அன்று கண்டது.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் 14 வருட சாதனையை தற்போது முறியடித்துள்ளார் சௌமியா சர்கார். போட்டியை இழந்த போதிலும் ஆட்டநாயகன் விருது சௌமியா சர்காருக்கே வழங்கப்பட்டது.