போட்டி 3: ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம்
மைதானம்: ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், தரம்சாலா
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 7, காலை 10.30 மணி
இந்த உலகக் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் ஏதேனும் மேஜிக் நிகழ்த்தவேண்டும் என்றால் இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெறவேண்டும். இரண்டு அணிகளையும் நிச்சயம் ரசிகர்கள் கத்துக்குட்டிகளாகக் கருதமுடியாது. இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பதால், நிச்சயம் இந்த அணிகளால் பெரும் தாக்கம் ஏற்படுத்த முடியும். துணைக்கண்ட ஆடுகளங்களில் நன்கு ஆடிப் பழக்கப்பட்ட அந்த அணிகள் எந்த போட்டியிலும் பெரும் அணிகளைக்கூட சாய்த்துவிடக் கூடியவையே. அதனால் நிச்சயம் இந்தப் போட்டியும் சரிசம பலம் வாய்ந்த இரு பெரும் அணிகளுக்கு இடையிலான போட்டியைப் போல் பரபரப்பானதாகவே இருக்கும்.
ஆப்கானிஸ்தான் - ஸ்பின்னே துணை
ஆப்கானிஸ்தான் அணி வழக்கம்போல் தங்களின் சுழல் படையை நம்பியே களம் காண்கிறது. லெக் ஸ்பின்னர் ரஷீத் கான், ஆஃப் ஸ்பின்னர்கள் முகமது நபி, மூஜிப் உர் ரஹ்மான், சைனாமேன் நூர் அஹமது என போட்டியை மாற்றக்கூடிய ஸ்பின்னர்கள் அந்த அணியில் நிறைந்திருக்கிறார்கள். ரஷீத், முஜீப், நபி மூவருமே வங்கதேச பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் தலைவலியாக இருப்பார்கள்.
நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி இருவரும் பவர்பிளேவில் தாக்கம் ஏற்படுத்தினால் அந்த ஸ்பின்னர்களிடமிருந்து மிடில் ஆர்டர் தப்புவது கடினம்தான். பேட்டிங்கில் ஓப்பனர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான் இருவரும் சிறந்த ஃபார்மில் இருக்கிறார்கள். தங்கள் டி20 பாணி பேட்டிங்கால் மிரட்டக்கூடிய அவர்கள், வங்கதேச வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக இருப்பார்கள். ஆனால், அந்த அணியின் மிடில் ஆர்டர் அந்த அணிக்கு இருக்கும் பெரும் பிரச்சனை!
வங்கதேசம் - பிரச்னைகளை கடந்து வரவேண்டும்!
உலகக் கோப்பைக்கு முந்தைய வாரங்கள் வங்கதேச அணிக்குப் பிரச்னைகளாலேயே கடந்திருக்கிறது. தமீம் இக்பால் ஓய்வு, கம்பேக், உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கம், அதன்பிறகான பேட்டிகள் என தொடர்ந்திருக்கும் சம்பவங்கள் நிச்சயம் அந்த அணியின் சூழ்நிலையை பாதித்திருக்கும். போதாக்குறைக்கு கேப்டன் ஷகில் அல் ஹசனின் ஃபிட்னசும் கூட கவலை தருவதாக இருக்கிறது. இருந்தாலும் பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலுமே அந்த அணி ஷகிப்பை பெரிதும் நம்பியிருக்கிறது. அவர் முழு ஃபிட்னஸோடும், அந்த அணி தெளிவான மனநிலையோடும் ஆட்டத்தைக் கையாளவேண்டும். மெஹதி ஹசன் மிராஜ் போன்ற ஒரு வீரர் நல்ல ஃபார்மில் இருப்பதும் அந்த அணிக்கு சாதகமான விஷயம்.
தரம்சாலா மைதானம் எப்படி?
கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருக்கும் ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் ஸ்டேடியம் ஸ்விங்குக்கு சாதகமாக இருக்கும். அதனால் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள நினைப்பார்கள். இங்கு நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பெரிய ஸ்கோர்கள் எடுக்கப்பட்டாலும், சர்வதேச போட்டிகளில் பெரிய ஸ்கோர்கள் எடுக்கப்பட்டதில்லை. இந்தப் போட்டியிலும் நிச்சயம் பௌலர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சமீபத்திய போட்டிகள்:
வங்கதேசமும் ஆப்கானிஸ்தானும் சமீபமாக 4 போட்டிகளில் மோதியிருக்கிறார்கள். அதில் இவ்விரு அணிகளுமே இரு முறை வென்றிருக்கின்றன. வங்கதேசத்தில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்றது ஆப்கானிஸ்தான். ஆனால் ஆசிய கோப்பை போட்டியில் படுதோல்வியடைந்தது.
ஆப்கானிஸ்தான் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் அவர்களின் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக இருப்பதால், அவர்கள் ரன் சேர்ப்பது பெரிதும் ஓப்பனர்களையே நம்பியிருக்கிறது. குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் இருவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். குர்பாஸ் ஐபிஎல் தொடரில் இந்திய ஆடுகளங்களில் ஆடிப்பழக்கப்பட்டவர் என்பதும், பெரும் தொடரில் பல முன்னணி வீரர்களை கையாண்டவர் என்பதும் அவர் மீது சற்று அதிக நம்பிக்கை கொடுக்கும்.
வங்கதேசம் - மெஹதி ஹசன் மிராஜ்
மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் மெஹதி ஹசன் மிராஜ், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ஓப்பனிங், மிடில் ஆர்டர் என எல்லா ஏரியாவிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார் அவர். பேட்டிங்கில் மட்டுமல்லாது தன் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சால் பௌலிங்கிலும் அணிக்குக் கைகொடுத்துக்கொண்டிருக்கிறார். கடந்த உலகக் கோப்பையில் ஷகிப் எப்படி கலக்கினாரோ அதுபோல் ஒரு தொடர் இவருக்கு இம்முறை அமையலாம்.