கடந்த முறை டி20 வடிவத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடர், இம்முறை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கிறது. ஆசியக் கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல சம்மதிக்காததால், இலங்கையில் போட்டி நடைபெற உள்ளது. வரும் 30ஆம் தேதி ஆசியக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், பங்களாதேஷ் வீரரொருவர் மேற்கொள்ளும் பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
பங்களாதேஷ் அணியில் 23 வயதான முகமது நயிம் ஷேக் என்பவர், இடது கை பேட்டராக விளையாடி வருகிறார். இவர், வித்தியாசமான முறையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அணியின் மனநல பயிற்சியாளருடன் இணைந்து, இப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
அந்த வகையில், நெருப்பில் இறங்கி நடந்து பயிற்சி பெற்று வருகிறார் முகமது நயிம். 6 அடி தூர நெருப்பில் முகமது நயிம் ஷேக் நடந்து வரும் வீடியோ இணையத்தில் பரவியுள்ளது. இந்த பயிற்சி மனதை வலிமையாக்கும் பயிற்சி என்று கூறப்படுகிறது. ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ, ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. ”இது மிகவும் முட்டாள்தனமானது. பெரிய போட்டிக்கு முன்னதாக அவர் காயப்பட்டால் என்ன செய்வது?” எனப் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இன்னும் சிலரோ, ”ஷேக் போன்ற வீரர்கள் தங்கள் மன மற்றும் உடல் வலிமையை மேம்படுத்துவதில் வித்தியாசமான அணுகுமுறைகளில் ஆர்வம் கொண்டுள்ளனர்” எனப் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த வழக்கத்திற்கு மாறான பயிற்சி முறை குறித்து முகமது நயிம் ஷேக், எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.