பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் 21-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் சாத் ஷகீல் 141 ரன்கள் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 171* ரன்கள் குவித்து மிரட்ட, 448 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி டிக்ளார் செய்தது. ரிஸ்வான் இரட்டை சதத்தை எட்ட 29 ரன்களே மீதமிருந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் டிக்ளார் செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது.
எப்படியும் வங்கதேசத்தை சுருட்டிவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட பாகிஸ்தான் அணி கேப்டனுக்கு ஷத்மன் இஸ்லாம் 93 ரன்கள், மொனிமுல் 50 ரன்கள், முஷ்பிகுர் ரஹீன் 191 ரன்கள், லிட்டன் தாஸ் 56 ரன்கள் மற்றும் மெஹிதி ஹாசன் 77 ரன்கள் என ஒட்டுமொத்தமாக பேட்டிங்கில் மிரட்டிய வங்கதேச அணி 117 ரன்கள் முன்னிலையுடன் 565 ரன்கள் குவித்தது.
117 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு 3வது ஓவரிலேயே விக்கெட்டை எடுத்துவந்த ஷோரிஃபுல் இஸ்லாம் வங்கதேசத்திற்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார். 28 ரன்கள் இருந்தபோது இரண்டாவது விக்கெட்டை ஹசன் மமூத் வீழ்த்த, மீதமிருக்கும் விக்கெட்டுகளை சாய்க்கும் வேலையை ஸ்பின்னர்கள் பார்த்துக்கொண்டனர்.
இந்த போட்டியில் சோபிக்காத மூத்த வீரர் ஷாகிப் அல் ஹசன் சரியான நேரத்தில் தன்னுடைய கையை உயர்த்தினார். நல்ல ஃபார்மில் இருக்கும் ஷஃபீக்கை 37 ரன்னில் வெளியேற்றிய அவர், முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷாத் ஷக்கீலை பூஜ்ஜியம் ரன்னில் வெளியேற்றி வங்கதேசத்தின் பக்கம் போட்டியை எடுத்துவந்தார்.
மிடில் ஆர்டர் வீரர்கள் மெஹிதி ஹாசனின் சுழலில் சிக்கி விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேற 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான் அணி. அதிகபட்சமாக மெஹிதி ஹாசன் 4 விக்கெட்டுகளும், ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 6.3 ஓவரில் எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 21 வருட மோதலில் 12 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியை சமனும் செய்திருந்தது வங்கதேச அணி.
இந்நிலையில் முதல்முறையாக பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது மட்டுமில்லாமல், அதை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து சம்பவம் செய்து அசத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது வங்கதேசம்.
இதையும் படிக்க: யாராலும் அசைக்க முடியாத 94 வருட சாதனை.. டெஸ்ட் சதமடித்து இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் வரலாறு!
பாகிஸ்தானின் தோல்வியை பார்த்த ரசிகர்கள், “முன்னாடியே டிக்ளர் பண்ணி தப்பு பண்ணிட்டியே சிங்காரம், இதுக்காகவா ரிஸ்வானை இரட்டை சதம் அடிக்க விடாமல் தடுத்திங்க, கேப்டனின் ஓவர் கான்ஃபிடன்ஸ் தான் தோல்விக்கு காரணம்” என விமர்சித்து வருகின்றனர்.