ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9வது பதிப்பானது ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. அக்டோபர் 3 முதல் அக்டோபர் 20 வரை நடைபெறவிருக்கும் 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பட்டியலில், குரூப் ஏ-வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை முதலிய 5 அணிகளும், குரூப் பி-ல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா முதலிய 5 அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில் தொடரின் முதல் போட்டியானது ஷார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானதில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.
2024 மகளிர் டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. ஸ்காட்லாந்து பவுலர்களை எதிர்கொண்டு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச வீரர்கள், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்தனர். ஸ்காட்லாந்து பவுலர் சஸ்கியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் சாரா பிரைஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சாராவை மறுமுனையில் நிற்கவைத்துவிட்டு மற்ற விக்கெட்டுகளை எல்லாம் வீழ்த்திய வங்கதேச பவுலர்கள், வங்கதேச அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். சாரா பிரைஸ் 49 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தாலும், ஸ்காட்லாந்து அணியால் 20 ஓவர் முடிவில் 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 16 தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது வங்கதேச அணி. கடைசியாக 2014 டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் வெற்றிபெற்றிருந்தது.
இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாடிவருகிறது.