wide ஆக வீசப்பட்ட பந்து.. தவறாகக் கணித்த பேட்டர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ!

குவைத் அணி வீரர் ஒருவர் வைடாக (wide) வீசிய பந்து ஒன்று, ஒரு விக்கெட்டையே காலி செய்திருப்பதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது
குவைத் கிரிக்கெட்
குவைத் கிரிக்கெட்ட்விட்டர்
Published on

லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் கிரிக்கெட் எனும் விளையாட்டில் பல்வேறு விதிகள் புகுத்தப்பட்டு, நாளுக்குநாள் மெருகேறி வருவதுடன் விருந்தும் படைத்துவருகிறது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு பந்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலைக்கு ரசிகர்களின் மனநிலையைத் தள்ளவைத்துள்ளது. அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். ஒரு பந்தில் வெற்றிபெற்ற அணிகளும் உள்ளன. அதே ஒரு பந்தில் தோல்வியுற்ற அணிகளும் உள்ளன. இதுதவிர, இந்த ஒரு பந்தில் எண்ணற்ற மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. அப்படியான ஒரு மாற்றம்தான் தற்போது அரங்கேறியுள்ளது.

குவைத்தில் கே.சி.சி. சேலஞ்சர்ஸ் என்ற டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குவைத் அணி வீரர் ஒருவர் வைடாக (wide) வீசிய பந்து ஒன்று, ஒரு விக்கெட்டையே காலி செய்திருப்பதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. குவைத் அணியைச் சேர்ந்த வாகர் (waqar) என்ற வீரர் எதிரணிக்குப் பந்துவீசுகிறார். சுழற்பந்து வீச்சாளரான அவர், அந்தப் பந்தை வித்தியாசமான முறையில் எதிரணியில் மட்டைபிடிப்பவருக்கு வீசுகிறார். அப்போது, வாகர் வீசிய அந்தப் பந்து வைடாகச் செல்கிறது என பேட்டர் நினைக்கிறார்.

ஆனால், அந்தப் பந்து அடுத்த நொடி டக்கென்று ஸ்டெம்பைப் பதம் பார்க்கிறது. இதனால் அவர் விக்கெட்டைப் பறிகொடுக்கிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்துவரும் நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ‘அந்த தங்கத்த ஐபிஎலுக்கு தூக்கிட்டு வாங்கடா’ எனவும், ’இந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சு’ எனவும் கமெண்ட அள்ளித் தெளிக்கின்றனர். இன்னும் சிலர் எல்லாப் பந்துகளையும் தவறாகக் கணித்துவிடக் கூடாது. அப்படி நினைத்தால் இதுபோன்ற சூழ்நிலைதான் ஏற்படும் எனவும் ஆலோசனை கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com