போட்டியில் எவ்வளவு அழுத்தமான சூழ்நிலையாக இருந்தாலும் சரி, போறபோக்கில் கூலாக கையாள்வதால் தோனியை கேப்டன் கூல் என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
தோனியின் கேப்டன் கூல் என்ற டெக்லைனுக்கு சான்றாக பல சூழ்நிலைகளை நம்மால் பகிர்ந்துகொள்ள முடியும், 2007 டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டி சமனில் முடிந்தபோதும் சரி, 2007 டி20 உலகக்கோப்பை இறுதிபோட்டியின் இறுதி ஓவர், 2011 உலகக்கோப்பை வின்னிங் தருணம், 2013 சாம்பியன் டிரோபி வின்னிங் தருணம் என தோனி பல முக்கியமான தருணங்களில் தன்னுடைய அமைதியான கேப்டன்சி மூலம் மறக்கமுடியாத வெற்றிகளை இந்திய அணிக்கு தேடிக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தோனியின் கோபமான மற்றொரு பக்கம் குறித்து சில நிகழ்வுகளே நாம் களத்தில் பார்த்திருக்கிறோம். ஒருமுறை அம்பயரின் முடிவை எதிர்த்து தோனி களத்திற்குள் வந்த தருணத்தை எந்தவொரு தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களாலும் மறக்கமுடியாது. ஆனால் அவருடைய முழுமையான கோபத்தை நாம் பார்ப்பதென்பது அரிதாகவே இருந்துவருகிறது.
அந்தவகையில் தோனி அதிகப்படியான கோவத்தில் இருந்த தருணம் குறித்து முன்னாள் சிஎஸ்கே அணி வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் பகிர்ந்துள்ளார்.
இன்சைடுஸ்போர்ட் உடன் பேசியிருக்கும் பத்ரிநாத், தோனியின் கோபமான பக்கம் குறித்து பகிர்ந்துள்ளார், அவரும் மனிதர் என்ற கூற்றை முன்வைத்தார்.
தோனி குறித்து பேசியிருக்கும் அவர், “அவரும் ஒரு மனிதர்தான். அந்த தருணத்தில் அவர் தனது அமைதியை இழந்துவிட்டார். ஆனால் மைதானத்தில் ஒருபோதும் அவர் கோவத்தை வெளிக்காட்டியதில்லை. தன்னுடைய அமைதியை தான் இழந்துவிட்டதை ஒருபோதும் எதிரணிக்கு தோனி தெரியப்படுத்த மாட்டார்.
தோனி அதிகப்படியாக கோவப்பட்ட அந்த தருணம் நடந்தது ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போதுதான். சென்னையில் நடந்த ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் நாங்கள் 110+ ரன்களை இலக்காக கொண்டிருந்தோம். ஆனால் அங்கு குறைவான தருணத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, நாங்கள் போட்டியில் தோல்வியடைந்தோம்.
நான் அனில் கும்ப்ளேவுக்கு எதிராக ஒரு லேப் ஷாட்டில் LBW மூலம் அவுட் ஆனேன். எனவே, நான் டிரஸ்ஸிங் அறைக்குள் நின்று கொண்டிருந்தேன், அவர் உள்ளே வந்து கொண்டிருந்தார். அங்கு ஒரு சிறிய தண்ணீர் பாட்டில் இருந்தது. எம்.எஸ் அதை கோவத்தில் வேகமாக உதைத்து பூங்காவில் இருந்து வெளியேற்றினார். எங்களால் அவருடைய கண்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லை” என்று பத்ரிநாத் கூறியுள்ளார்.