தென்னாப்பிரிக்காவின் நியூலேண்ட்ஸ் கேப்டவுன் ஆடுகளமானது எப்போதும் பவுன்சர்களுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் சாதகமான ஆடுகளமாகவே இருந்துள்ளது. ஆனால் முதல் நாளுக்கு பிறகு தட்டையாக மாறும் ஆடுகளம் ஓரளவு பேட்டிங்கிற்கு ஏதுவான ஆடுகளமாகவே இதுவரை இருந்துள்ளது.
இதற்கு முன்னர் இந்த பிட்ச்சில் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான போட்டி கூட 4வது நாளுக்கு சென்று தான் முடிவுக்கு வந்தது. போட்டிக்கு முந்தைய பிட்ச் ரிப்போர்ட்டும் இதேநிலையை தான் கூறிய. ஆனால் போட்டியில் நடந்தது எல்லாமே தலைகீழாகவே அமைந்தது.
122 வருடங்களுக்கு முன்பு 1902ம் ஆண்டு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 25 விக்கெட்டுகள் விழுந்தன. அதற்கு பிறகு நேற்றைய இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டியில் தான் முதல் நாள் டெஸ்ட் போட்டியில் 23 விக்கெட்டுகள் விழுந்தன. அதுவும் இந்திய அணி 153 ரன்னுக்கு 4 விக்கெட்டுகள் இருந்த நிலையில் கடைசி 11 பந்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது நாளில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் ஆல்அவுட்டானது. 79 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் வெறும் 642 பந்துகளிலேயே போட்டி முடிவுக்கு வந்தது அதிர்ச்சியளித்தது. கிரிக்கெட் வரலாற்றில் குறைவான பந்துகளில் முடிவுற்ற போட்டியாக மாறி மோசமான சாதனை படைத்தது.
இந்நிலையில் முதல்நாள் முடிவுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஷான் பொல்லாக், ரவி சாஸ்திரி முதலிய முன்னாள் வீரர்கள் ஆடுகளத்தின் தன்மையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் அவர்கள் வீரர்களின் மோசமான அணுகுமுறையையும் குற்றஞ்சாட்டினர்.
இந்தியா தென்னாப்பிரிக்கா மோதிய இந்தப் போட்டி விரைவாகவே முடிவுக்கு வர காரணம் என்ன? மோசமான ஆடுகளமா? அல்லது முற்றிலும் மோசமான பேட்டிங்கா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. போட்டியை குறித்த உண்மையைச் சொல்வதென்றால், விளையாடவே முடியாத டெலிவரிகள் என அதிகம் வீசப்படவில்லை. இந்தியா-தென்னாப்பிரிக்கா இரண்டு அணியிலும் பெரும்பாலான பேட்டர்கள் பந்தை எட்ஜிங் செய்து அவுட்டானார்கள். இது நிச்சயம் 55 ரன்னுக்குள் அவுட்டாகும் ஆடுகளமாக இருக்கவில்லை. அதேநேரத்தில் 250-300 ரன்கள் அடிக்கும் ஆடுகளம் என்றும் கூறிவிடமுடியாது.
ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவுக்கு பிறகே ஆடுகளத்தில் விரிசல் ஏற்படும். ஆனால் இந்தப்போட்டியில் முதல் நாளிலேயே விரிசல்கள் இருந்ததாக முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இந்த ஆடுகளத்திற்கு நல்ல ஆடுகளம் என்ற ரேட்டிங் கொடுக்க முடியாது என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஷான் பொல்லாக் தெரிவித்தார். அதேநேரத்தில் இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி ஆடுகளத்தை மோசமான ஆடுகளம் என்றும், போட்டி 2வது நாளிலேயே முடிவுக்கு வந்துவிடும் என்று விமர்சனம் செய்தார். ஷான் பொல்லாக்கும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
முதல்நாள் முடிவுக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய சாஸ்திரி, "ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் எல்லாம் விழுவதில்லை. ஒருவேளை ஆடுகளம் ஆபத்தானதாக மாறியிருக்கலாம். போட்டி நடுவர் இதை மிகக் கூர்ந்து கவனிப்பார்” என்று சாஸ்திரி கூறினார். அவரது சக கமண்டேட்டர் ஷான் பொல்லாக், "ஆம், நீங்கள் இந்த ஆடுகளத்திற்கு நல்ல மதிப்பீட்டை வழங்க முடியாது. துரதிருஷ்டவசமாக போட்டி 2வது நாளிலேயே முடிவடையும்” என்று ரவி சாஸ்திரியின் கூற்றை ஒப்புக்கொண்டார்.
மோசமான ஆடுகளமா என்ற கேள்விக்கு பதில் பேசியிருந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் எல்கர், “ கேப்டவுன் ஆடுகளத்தை பொதுவாக நான் மோசமான ஆடுகளம் என குறிப்பிட மாட்டேன். தனிப்பட்ட முறையில் எனக்கு இது நல்ல பேட்டிங் ஆடுகளமாக இருந்துள்ளது. ஆனால் தற்போது பேட்டிங் செய்வதற்கு கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இதை எப்படி கூறுவதென்று எனக்கு தெரியவில்லை” என முதல்நாள் முடிவில் கூறியிருந்தார்.