ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட், டி20 என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர் யார் என்று தற்போது கேட்டால், பெரும்பாலான முன்னாள் வீரர்களின் பதில் பாபர் அசாம் என்பதாகத்தான் இருக்கும். எக்காலத்திற்கும் சிறந்த வீரராக பார்க்கப்படும் விராட்கோலியும் கூட இதே பதிலைத்தான் சமீபத்திய உரையாடல் ஒன்றில் கூறியிருந்தார்.
9 ஐசிசி உலகக்கோப்பைகளை வென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பாபர் அசாம் வைத்திருக்கும் பேட்டிங் சராசரியே அதற்கு ஒரு தரமான சான்றாகும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 9 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள், 2 அரைசதங்கள் என அடித்திருக்கும் அவர் 588 ரன்களுடன் 74 சராசரியை வைத்திருக்கிறார்.
அதேபோல இங்கிலாந்துக்கு எதிராக 48 சராசரியுடன் 2 சதங்கள் - 5 அரைசதங்கள், நியூசிலாந்துக்கு எதிராக 47 சராசரியுடன் 2 சதங்கள் - 7 அரைசதங்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 65 சராசரியுடன் 1 சதம் - 3 அரைசதங்கள், இலங்கைக்கு எதிராக 62 சராசரியுடன் 3 சதங்கள் - 1 அரைசதம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 80 சராசரியுடன் 5 சதங்கள் - 1 சதங்கள் என அனைத்து உலகத்தரம் வாய்ந்த அணிகளுக்கு எதிராகவும் தன்னுடைய சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.
பேட்டிங் மட்டுமல்லாமல் பாபர் அசாம் பாகிஸ்தானின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அந்த அணியேவும் ஏறுமுகத்தையே கண்டுவருகிறது. 121 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியிருக்கும் அவர், 60 வின்னிங் சதவீதம் வைத்திருக்கிறார். அடுத்த லெஜண்டரி பேட்டராக மாறுமளவு சமீபத்தில் தன்னை மெருகேற்றி ஜொலித்துக்கொண்டிருக்கும் பாபர் அசாம், 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் ஆஃப் தி இயர் என இரண்டு விருதுகளையும், ஐசிசி கௌரவ விருதான சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியையும் வென்று அசத்தியுள்ளார்.
உலக அணிகளுக்கு எதிராக டெஸ்ட், டி20, ஒருநாள் கிரிக்கெட் என மூன்று வடிவத்திலும் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கும் பாபர் அசாம், இந்தியாவிற்கு எதிராக மட்டும் மோசமான ரெக்கார்டையே வைத்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஒரு அரைசதம் கூட பதிவு செய்யவில்லை. இந்தியாவிற்கு எதிராக அவருடைய அதிகபட்ச ODI ரன்கள் 48 ரன்களே ஆகும்.
மற்ற நாடுகள் அனைத்தைக்காட்டிலும் இந்தியாவிற்கு எதிராக மட்டுமே அவர் குறைவான சராசரி வைத்திருக்கிறார். இந்தியாவுடனான அவருடைய ODI சராசரி 28ஆக இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 வீரராக இருக்கும் பாபர், ஒரு அணிக்கு எதிராக குறைவாக வைத்திருக்கும் ஒரே சராசரி இதுவாகும். இந்தியாவிற்கு எதிரான 4 டி20 போட்டிகளில் ஒருமுறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக ஐசிசி தொடர்களை தவிர பிற தொடர்களில் அவர் விளையாடாததே இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும், விரைவில் இந்த மோசமான சாதனையை உடைக்கும் இடத்தில் பாபர் அசாம் நிச்சயம் இருக்கிறார்.