WC தோல்விக்கு பின் எழுந்த விமர்சனம்! கேப்டன் பொறுப்பை உதறிய பாபர்! புதிய கேப்டன்களை அறிவித்த PCB!

பாகிஸ்தான் அணியின் 3 விதமான கிரிக்கெட்டிலும் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் பாபர் அசாம்.
babar azam
babar azamTwitter
Published on

2023 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்புவரை அரையிறுதிக்கு முன்னேறக்கூடிய ஒரு அணியாகவும், கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாகவும் பாகிஸ்தான் அணி பார்க்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் (ஏ)மாற்றி, விளையாடிய 9 லீக் போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 5வது இடம்பிடித்த பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் தகுதியை இழந்து தொடரை விட்டே வெளியேறியது.

Pakistan Cricket Team
Pakistan Cricket TeamTwitter

இந்நிலையில், பல்வேறு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் தற்போதைய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன்புவரை நம்பர் 1 உலக அணியாக பாகிஸ்தானை எடுத்துச்சென்ற கேப்டன் பாபர் அசாமை, பாகிஸ்தான் ஊடகங்களும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர்களும் கேப்டன்சியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

ஒரு வீரராக பாகிஸ்தானுக்கு துணை நிற்பேன்! - பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-ம் ஆண்டு பாகிஸ்தான் அணியை வழிநடத்த பிசிபி என்னிடம் கேட்டுக்கொண்ட தருணம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் களத்தில் நான் பல உயர்வு தாழ்வை சந்தித்திருந்தாலும், உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் பெருமையை நிலைநாட்டுவதை என் முழு மனதுடன் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டேன். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் கூட்டு முயற்சியின் விளைவாக வெள்ளை-பந்து வடிவத்தில் நம்பர் 1 இடத்தை எட்டியது பாகிஸ்தான் அணி. இந்த பயணத்தின் போது அசைக்க முடியாத ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று நான் பாகிஸ்தான் அணியின் அனைத்து வடிவத்திலிருந்தும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். இது கடினமான முடிவு தான், இருப்பினும் இந்த முடிவு எடுப்பதற்கு இது சரியான நேரம் என்று நான் உணர்கிறேன். தொடர்ந்து ஒரு வீரராக மூன்று வடிவத்திலும் பாகிஸ்தானுக்கு என் முழு உழைப்பையும் கொடுப்பேன். எனது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பை புதிய கேப்டனுக்கும், பாகிஸ்தான் அணிக்கும் தொடர்ந்தளிப்பேன். இந்த குறிப்பிடத்தக்க பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது மனமார்ந்த நன்றி’ என தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய கேப்டன்களை அறிவித்த பிசிபி!

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடம் நீண்ட நேர விவாதத்திற்கு பின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டன்களை அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம்.

பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டனாக ஷாஹீன் ஷா அப்ரிடியும், டெஸ்ட் அணி கேப்டனாக ஷான் மசூத்தையும் நியமித்து அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com