தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 1-1 என டி20 தொடரை சமன்செய்தும், 2-1 என ஒருநாள் தொடரை வென்றும் அசத்தியது.
இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முதன்முறையாக வென்று வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சொதப்பியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவர் மட்டுமே நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தினர். பந்துவீச்சில் பும்ராவை தவிர வேறு எந்த பவுலர்களும் சோபிக்கவில்லை. இளைஞர்கள் சொதப்பும் நிலையில் புஜாரா மற்றும் ரஹானே இருவரையும் மீண்டும் அழைத்துவாருங்கள் என ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.
2 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தால் இனி தொடரும் வெல்லும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டுள்ளது. இந்நிலையில் 1-1 என டெஸ்ட் தொடரை சமன்செய்யும் கட்டாயத்தில் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் தான் தொடரை வெல்லும் விதமாக வேகப்பந்துவீச்சை வலுப்படுத்தும் வகையில் இளம் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் இணைக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஏ அணி, தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா மண்ணில் ஆவேஷ் கான் 5 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில், 2வது போட்டியில் விளையாடும் வகையில் இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளார். பும்ரா ஒருவரை நம்பி தொடரை வெல்ல முடியாது என ரோகித் சர்மா மற்ற பவுலர்கள் மீது அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், ஆவேஷ் கான் இணைக்கப்பட்டுள்ளார். இந்திய அணி தொடரை சமன்செய்யுமா என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கே), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத் (கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், ஆவேஷ் கான்