2023 ODI உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானம் மற்றும் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதிப்போட்டிக்கான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் முதலிய 2 பிட்ச்களுக்கும் சராசரி மதிப்பீட்டை வழங்கியுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ICC.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, ஐசிசி போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் ஆடுகளத்தை “சராசரி ஆடுகளம்” என மதிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் கொல்கத்தாவில் உள்ள ஆடுகளத்தை முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் ”சராசரி ஆடுகளம்” (Average) என மதிப்பிட்டுள்ளார்.
2023 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்தையும் இந்திய அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், இந்தியா விளையாடிய 11 போட்டிகளில் 5 போட்டிகளுக்கான ஆடுகளங்களை (Average) சராசரி என்று மதிப்பிட்டுள்ளது ஐசிசி. இறுதிப் போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானம், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நடத்தப்பட்ட லக்னோ மைதானம், பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட அகமதாபாத் மைதானம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடத்தப்பட்ட கொல்கத்தா மைதானம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடத்தப்பட்ட சென்னை மைதானம் என 11 ஆட்டங்களில் 5 ஆட்டங்களுக்கான ஆடுகளங்கள் சராசரி என்றே மதிப்பிடப்பட்டுள்ளன.
இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. ஆனால் அதே நேரம் ஆஸ்திரேலியாவிற்கு போக போக பேட்டிற்கு பந்து எளிதாக வந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் தனியொரு ஆளாக 120 பந்துகளில் 137 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் இலக்கை விரட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றது.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதி போட்டிக்கான வான்கடெ மைதானம் “நல்ல ஆடுகளம்” என ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சதம் விளாச இந்திய அணி 397 ரன்களை குவித்தது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் இடையே 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது. இதுபோன்ற ஆடுகளத்தில் முகமது ஷமி ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை (7/57) பதிவுசெய்த முதல் இந்திய வீரராகவும் மாறினார்.