AUSvNZ | வெற்றிப் பயணத்தைத் தொடருமா ஆஸ்திரேலியா? தரம்சாலாவில் நியூசிலாந்துடன் பலப்பரிட்சை..!

இந்த உலகக் கோப்பையில் தரம்சாலாவில் இரண்டு போட்டிகள் நடந்திருக்கின்றன. ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றிருக்கிறது. இன்னொரு போட்டியில் சேஸ் செய்த அணி வென்றிருக்கிறது.
David Warner | Mitchell Starc
David Warner | Mitchell StarcRavi Choudhary
Published on
போட்டி 27: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து
மைதானம்: ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், தரம்சாலா
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 28, காலை 10.30 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

ஆஸ்திரேலியா
போட்டிகள் - 5, வெற்றிகள் - 3, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 6
சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் வார்னர் - 332 ரன்கள்
சிறந்த பௌலர்: ஆடம் ஜாம்பா: 13 விக்கெட்டுகள்
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்து உலகக் கோப்பையை தொடங்கியிருந்த ஆஸ்திரேலிய அணி அதன்பின் நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறது. இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது நடப்பு சாம்பியன். கடைசிப் போட்டியில் நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை சாதனை படைத்திருக்கிறது ஆஸ்திரேலியா

நியூசிலாந்து
போட்டிகள் - 5, வெற்றிகள் - 4, தோல்வி - 1, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 8
சிறந்த பேட்ஸ்மேன்: ரச்சின் ரவீந்திரா - 290 ரன்கள்
சிறந்த பௌலர்: மிட்செல் சான்ட்னர் - 12 விக்கெட்டுகள்
இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என தொடர்ந்து 4 வெற்றிகள் பெற்று இந்த உலகக் கோப்பையை கெத்தாக தொடங்கியது நியூசிலாந்து. ஆனால் முந்தைய போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அந்த அணி தோற்றிருக்கிறது. தோற்றாலும் ஓரளவு சவால் கொடுத்தது அந்த அணி.

மைதானம் எப்படி இருக்கும்?

இந்த உலகக் கோப்பையில் தரம்சாலாவில் இரண்டு போட்டிகள் நடந்திருக்கின்றன. ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றிருக்கிறது. இன்னொரு போட்டியில் சேஸ் செய்த அணி வென்றிருக்கிறது. எதிர்பார்த்ததைப் போல் தரம்சாலா ஆடுகளம் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கவில்லை. தொடக்கத்தில் சில ஓவர்கள் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், அதன்பிறகு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்திருக்கிறது. டாஸ் வெல்லும் அணிகள் பந்துவீச்சை தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம்.

நான்காவது வெற்றியைப் பதிவு செய்யுமா ஆஸ்திரேலியா?

தொடரின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிகு எதுவுமே சரியாகப் போகவில்லை. பேட்டிங், பௌலிங் என அனைத்தும் தடுமாறியது. ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த வெற்றிகளுக்குப் பிறகு அந்த அணி நம்பிக்கை பெற்றிருக்கிறது. பேட்டிங், பௌலிங் அனைத்தும் சிறப்பாக செயல்படத் தொடங்கியிருக்கின்றன. வார்னர் அடுத்தடுத்து இரு சதங்கள் அடித்து மிரட்டியிருக்கிறார். ஃபார்மில் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் கூட கடந்த போட்டியில் அரைசதம் அடித்துவிட்டார். மேக்ஸ்வெல் உலகக் கோப்பையின் அதிவேக சதம் அடித்து மிரட்டியிருக்கிறார். பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஓரளவு நல்ல டச்சில் இருக்கிறார்கள். பௌலர்களும் கடந்த போட்டியில் தங்கள் உண்மை முகத்தைக் காட்டினார்கள். தொடர்ந்து 3 போட்டிகளில் 4 விக்கெட் ஹால் எடுத்திருக்கும் ஜாம்பா டாப் விக்கெட் டேக்கராக உருவெடுத்திருக்கிறார். இப்படி எல்லாம் சரியாக அமையும்போது, காயத்தால் ஆடாமல் இருந்த டிராவிஸ் ஹெட் அணிக்குத் திரும்பலாம் என்று கருதப்படுகிறது. கடந்த போட்டியில் லாபுஷான் அதிரடி அரைசதம் அடித்திருக்கும் நிலையில், சுமாராக ஆடிவரும் கேமரூன் கிரீன் லெவனில் தன் இடத்தை இழக்கலாம்.

நியூசிலாந்துக்கு கடினமான காலகட்டம்

நியூசிலாந்து அணி தொடர்ந்து 4 வெற்றிகள் பதிவு செய்தபோது எப்படியும் அரையிறுதிக்கு முன்னேறிவிடுவார்கள் என்று எல்லோருமே ஆருடம் கூறத் தொடங்கினார்கள். ஆனால் அந்த அணிக்கு அரையிறுதி பயணம் எளிதாக இருக்கவில்லை. ஏனெனில் அந்த நான்கில் மூன்று வெற்றிகள் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக வந்தவை. கடந்த போட்டியில் கடினமான இந்திய அணியை சந்தித்தபோது அந்த அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் வெற்றி பெறத் தவறினால், அது அவர்களின் உலகக் கோப்பையை மொத்தமாக புரட்டிப்போடலாம். ஏனெனில், இதன்பிறகு அவர்கள் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை சந்திக்கவேண்டியிருக்கிறது. இந்த உளவியல் ரீதியிலான சவால் ஒருபுறம் இருந்தாலும், அந்த அணி இத்தொடரில் நல்ல கிரிக்கெட் விளையாடி வருகிறது. ரவீந்திரா, மிட்செல், சான்ட்னர், ஹென்றி, ஃபெர்குசன் என அணி முழுக்க எல்லோரும் கைகொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். என்ன அதிகம் எர்திர்பார்க்கப்படும் டாம் லாதம், டிரென்ட் போல்ட் இருவரும் தங்கள் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்தால் அது அணிக்கு இன்னும் சாதகமாக இருக்கும். முதல் போட்டிக்குப் பிறகு பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறிய கான்வேவும் எழுச்சி காணவேண்டும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர்: தொடர்ந்து இரு சதங்கள் அடித்து மிரட்டல் ஃபார்மில் இருக்கிறார் வார்னர். தரம்சாலா ஆடுகளத்தில் அவருக்கும் போல்ட & ஹென்றி ஆகியோருக்குமான போட்டி நல்ல விருந்தாக அமையும்.

நியூசிலாந்து - டாம் லாதம்: 7 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து இங்கு ஒருநாள் போட்டியில் விளையாடியது. அப்போது எல்லோரும் தடுமாறியபோது, லாதம் தான் அந்த அணியின் டாப் ஸ்கோரராகத் திகழ்ந்தார். நியூசிலாந்து கேப்டன் அப்படியொரு இன்னிங்ஸ் ஆடவேண்டிய தருணம் இது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com