போட்டி 27: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து
முடிவு: 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி (ஆஸ்திரேலியா - 388 ஆல் அவுட், 49.2 ஓவர்கள்; நியூசிலாந்து - 383/9)
ஆட்ட நாயகன்: டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)
பேட்டிங்: 67 பந்துகளில் 109 ரன்கள் (10 ஃபோர்கள், 7 சிக்ஸர்கள்)
ஹெட்டின் இந்த இன்னிங்ஸ் பற்றிப் பார்ப்பதற்கு முன், ஆஸ்திரேலிய நிர்வாகம் எடுத்த ஒரு முடிவைப் பற்றிப் பார்க்கவேண்டும். அதுதான் ஹெட்டின் இந்த இன்னிங்ஸ் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும்.
உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில நாள்கள் முன்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கையில் காயமடைந்தார் ஹெட். எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க, உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் அவர் தயாராக மாட்டார் என்று தெரியவந்தது. உலகக் கோப்பை ஸ்குவாடை இறுதி செய்யும்போது ஹெட்டுக்குப் பதில் லாபுஷானை களமிறக்குவார்கள் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் ஆஸ்திரேலிய நிர்வாகமோ ஒரு அதிர்ச்சிகரமான முடிவை எடுத்தது. அப்போது காயமடைந்திருந்த இன்னொரு வீரரான ஸ்பின்னர் ஆஷ்டன் அகருக்குப் பதிலாக லாபுஷான் சேர்க்கப்பட்டார். டிராவிஸ் ஹெட் அணியில் தொடர்ந்தார். அவர் தொடரின் பிற்பகுதிக்குத் தயார் ஆகிடுவார் என்றும், அதனால் அவர் அணியில் நீடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. அதை பலருமே விமர்சனம் செய்தனர்.
மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் என ஓப்பனிங்கில் ஆட அந்த அணியில் பல ஆப்ஷன்கள் இருந்த நிலையில், எதற்காக ஒரு இடத்தை தியாகம் செய்யவேண்டும் என்று பலரும் கேள்வி கேட்டனர். அதுமட்டுமல்லாமல் அகர் இடத்தை ஸ்பின்னர் கொண்டு நிரப்பாததால், இந்தியாவில் நடக்கும் ஒரு உலகக் கோப்பை தொடருக்கு ஒரேயொரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னரைக் கொண்டு களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. அதுவும் பெரிய அளவில் விமர்சனத்துக்குக் காரணமாக இருந்தது.
இந்நிலையில் டிராவிஸ் ஹெட் ஃபிட்டாகி விட்டார் என்றும், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலேயே அவர் களமிறங்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் கொஞ்சம் காத்திருந்து அவரை நியூஸிலாந்திற்கு எதிராக இறக்கியது ஆஸ்திரேலியா. எழுந்த அத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலிய அணி ஹெட் மீது நம்பிக்கை வைத்திருக்கக் காரணம் அவரது ஃபார்ம். அசுரத்தனமான அவரது ஃபார்ம். வார்னரோடு இணைந்து சூறாவளியாய் அவர் சுழல, அவர்கள் இருவரையும் வார்-ஹெட் என்று அழைத்தார்கள் ரசிகர்கள். இவர் வார்னரை விட பல மடங்கு வேகமாக ஆடி மிரட்டினார். அது போட்டியில் ஈடு இணையற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பித்தான் அவர் விஷயத்தில் பொறுமை காத்தது ஆஸ்திரேலிய அணி. அதை தான் ஆடிய முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே நிரூபித்திருக்கிறார் ஹெட்.
தான் சந்தித்த முதல் பந்தை அடிக்க முற்பட்ட ஹெட், அதைத் தவறவிட்டார். ஆனால் இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்து ரன் கணக்கைத் தொடங்கினார். அதன்பின் மூன்றாவது பந்திலேயே தன் முகத்தைக் காட்டத் தொடங்கினார் அவர். போல்ட் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்து சிக்ஸருக்குப் பறந்தது. ஹென்றி வீசிய அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதலிரு பந்துகளையுமே சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் அவர். ஆக, காயத்துக்குப் பிறகு வந்து தான் சந்தித்த முதல் 5 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்திருந்தார் ஹெட்!
அதன்பின் அவுட் ஆகி வெளியேறும் வரை அதே வேகம் தான். இவர் சூறாவளியாய் சுழல, மறுபக்கம் வார்னரும் வேகமாகவே ஆடினார். இருவரும் மாறி மாறி அடித்ததில் நியூசிலாந்து வீரர்களை நிலைகுலைந்து போனார்கள். எந்த பௌலரை மாற்றிப் பார்த்தும் ஹெட்டை வெளியேற்ற முடியவில்லை. லாக்கி ஃபெர்குசன், சான்ட்னர் என அனைவர் பந்திலும் பௌண்டரிகள் பறந்தன. 25 பந்துகளில் அரைசதம் கடந்தவர், 59 பந்துகளில் தன் முதல் உலகக் கோப்பை சதத்தை நிறைவு செய்தார்.
இந்தியாவுக்கு எதிராகத் தோல்வியை சந்தித்து வந்த நியூசிலாந்து அணியை இவரும் வார்னரும் ஆடிய ஆட்டம் மொத்தமாக ஆட்டிப் படைத்தது. பத்து ஓவர்கள் முடிவில் இவர்கள் அடித்திருந்த ஸ்கோர் 119 ரன்கள். கிட்டத்தட்ட ஓவருக்கு 12 ரன்கள் விகிதம் அடித்திருந்தனர். அடுத்த 30 ஓவர்கள் ஆஸ்திரேலிய அணி ஓவருக்கு 6 ரன்கள் என்ற கணக்கில் தான் எடுத்திருந்தது. ஆனால் அந்த முதல் 10 ஓவர்கள் ஏற்படுத்திய தாக்கம் கடைசி வரை நீடித்தது. மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி மெதுவாக ஆடியிருந்தாலும் ஒட்டுமொத்த ரன்ரேட் ஏழுக்கும் குறையாமல் இருந்தது. அது கொடுத்த நம்பிக்கை தான் ஆஸ்திரேலியா ஒரு மிகப் பெரிய ஸ்கோர் எடுக்கக் காரணமாக அமைந்தது!
"அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் போட்டி கடைசியில் மிகவும் நெருக்கடியான ஒன்றாக அமைந்துவிட்டது. நினைத்துப் பார்க்க முடியாத அட்டகாசமான போட்டியாக இது அமைந்தது. நான் இந்தப் போட்டிக்கு முன் பெரிய அளவில் தயாராகவில்லை. கொஞ்சம் நெட்ஸில் சில ஷாட்கள் ஆடினேன். கிட்டத்தட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போலத்தான். எனக்கு ஒருசில வாரங்கள் விடுப்பு கிடைத்தது. ஒரு சில சிறு காயங்கள் இருக்கிறது. ஆனால் ஓரிரு தினங்களில் அவையெல்லாம் சரியாகிவிடும். வார்னருக்கும் எனக்குமான பார்ட்னர்ஷிப் சிறப்பானது. நாங்கள் இருவரும் சிறப்பாக விளையாடுகிறோம் என்று நினைக்கிறேன். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருக்கிறோம். எப்போதுமே எங்களுக்குள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம். அப்போதைய சூழ்நிலை என்ன என்பதைப் பற்றி மட்டும் தான் யோசிப்போம். எப்போதும் பாசிடிவாக ஆட்டத்தை அணுகவேண்டும் என்று நினைப்போம்"
டிராவிஸ் ஹெட்