போட்டி 43: ஆஸ்திரேலியா vs வங்கதேசம்
முடிவு: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
வங்கதேசம்: 306/8
ஆஸ்திரேலியா: 307/2 (44.4 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: மிட்செல் மார்ஷ் - 132 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 177 ரன்கள் (17 ஃபோர்கள், 9 சிக்ஸர்கள்)
கடந்த இரண்டு போட்டிகளாக எப்படியொரு சூழ்நிலையில் களமிறங்கனாரோ அப்படியொரு சூழ்நிலையில் தான் இந்தப் போட்டியிலும் களம் கண்டார் மிட்செல் மார்ஷ். டிராவிஸ் ஹெட் விரைவாக வெளியேற, மூன்றாவது ஓவரிலேயே களம் புகுந்தார் அவர். இம்முறை இலக்கு மிகப் பெரியது. 307 ரன்கள் எடுக்கவேண்டும். அதனால் எப்படியும் நெருக்கடியை சமாளிக்க நிதானமாக விளையாடுவார் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால் அவர் மிட்செல் மார்ஷ் ஆயிற்றே. தன் பாணியை மாற்றிக்கொள்வாரா என்ன? களமிறங்கியதுமே தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்.
முதல் பந்தில் டாட் ஆடியவர், தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஃபோர் அடித்தார். அடுத்த பால் டாட். அடுத்தது ஃபோர். இன்னொரு முறை டாட் & ஃபோர். மஹதி ஹசனின் அந்த ஓவரில் 3 ஃபோர்கள் பறக்கவிட்டு அதிரடியாக தன் இன்னிங்ஸை தொடங்கினார். அடுத்த ஓவர் டஸ்கின் அஹமது. இம்முறை ஒரேயடியாக 3 டாட் பால்கள் ஆடிவிட்டு, கடைசி இரு பந்துகளில் ஃபோரும், சிக்ஸும் விளாசினார். நசும் அஹமது, மெஹதி ஹசன் மிராஜ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் என அனைவரின் பந்துகளிலும் பௌண்டரிகள் பறந்தது. மார்ஷின் அதிரடி வார்னர் நிதானமாக ஆடவும் உதவியது. விடாமல் ஒவ்வொரு பௌலரையும் பதம் பார்த்த மார்ஷ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அரைசதம் கடந்த பிறகு அவருடைய வேகம் சற்று குறைந்தது. முதல் 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தவர், அடுத்த 31 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் வார்னர் அவுட் ஆனதும் தன்னுடைய கவுன்ட்டர் அட்டாக்கை தொடங்கி வங்கதேச வீரர்கள் செட்டில் ஆக விடாமல் தடுத்தார். இப்போதும் பந்துவீச வந்த அனைவரின் பந்துகளும் பௌண்டரிக்குப் பறந்தன. சதத்தை நெருங்கியதும் பிரேக் அடித்த அவர், அளவு கடந்த பொறுமை காட்டினார். இருந்தாலும் 87 பந்துகளில் இந்த உலகக் கோப்பையில் தன் இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். ஸ்டீவ் ஸ்மித்தும் செட்டிலாகிவிட இருவரும் அடித்து துவைத்து ஆட்டத்தை 5 ஓவர்கள் மீதமிருக்கும்போதே முடித்தனர். வங்கதேச அணி இன்னுமொரு 30 ரன்கள் அடித்திருந்தால் மார்ஷ் நிச்சயம் இரட்டைச் சதமே கடந்திருப்பார். அந்த அளவுக்கு அசுரத்தனமாக இருந்தது அவரது ஆட்டம்.
இத்தனைக்கும் இந்த இன்னிங்ஸ் மிகமோசமான பந்துவீச்சுக்குப் பிறகு வந்தது. முதல் இன்னிங்ஸில் 4 ஓவர்கள் பந்துவீசிய மார்ஷ், 48 ரன்கள் வாரி வழங்கினார். நிச்சயம் எந்த வீரராக இருந்திருந்தாலும் அது மனதளவில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் மார்ஷ் அதை மொத்தமாக மறந்துவிட்டு ஒரு அட்டகாசமான இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார்.
"இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பெரிய ஸ்கோரை சேஸ் செய்திருப்பது திருப்தியாக இருக்கிறது. இப்போது அரையிறுதியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். டிராவிஸ் ஹெட் மீண்டும் அணிக்குத் திரும்பும்போது நான் எப்படியும் மூன்றாவது ஸ்லாட்டுக்கு மாற்றப்படுவேன் என்று எனக்கு நன்கு தெரியும். ஆனால் அதே அணுகுமுறையோடு என் ஆட்டத்தில் நம்பிக்கை வைத்து விளையாடுவது முக்கியம் என்பதை உணர்ந்தேன். ஒருசில போட்டிகளில் என்னுடைய இன்டென்ட்டை நான் இழந்திருந்தேன். இருந்தாலும் இப்போது மீண்டும் அதை மீட்டிருப்பது நல்ல விஷயம். ஒருசில சமயங்களில் அது தவறாக அமைந்துவிடும். ஆனால் பல நேரங்களில் அது சரியாகவே அமையும். இறந்துபோன என்னுடைய தாத்தா மிகவும் நல்ல மனிதர். அவருடைய வாழ்க்கையை நாங்கள் கொண்டாடினோம். இப்படியொரு சமயத்தில் நான் நன்றாக விளையாடி வெற்றி பெற்றிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் என் பாட்டி, அம்மா எல்லோரும் நிச்சயம் இந்த ஆட்டத்தைப் பார்த்திருப்பார்கள். அவர்கள் முகத்தில் இந்த ஆட்டம் ஒரு சிறு புன்னகையை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன். அரையிறுதி ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இது ஒரு அட்டகாசமான போட்டியாக இருக்கப்போகிறது. நான்கு சிறந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. கொல்கத்தாவுக்குப் போக காத்திருக்கிறேன்" என்று கூறினார் மிட்செல் மார்ஷ். அவருடைய பந்துவீச்சைப் பற்றிக் கேட்டபோது, "நான்கே ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்துவிட்டு எல்லா நாளும் நீங்கள் ஆட்ட நாயகன் விருது வாங்கிடப்போவதில்லை"
மிட்செல் மார்ஷ்