வளர்ந்துவரும் கிரிக்கெட்டில் களத்திலும் ஆட்டத்திலும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெறும். தவிர, எண்ணற்ற சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றன. ஒருகாலத்தில் ஹாட்ரிக் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிப்பதும், அதுபோல் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பதும் சாதனையாக இருந்தது. ஆனால் இன்று, 6 பந்துகளிலும் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், போட்டி ஒன்றில் பவுலர் ஒருவர் 6 பந்துகளில் 6 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3வது டிவிஷன் கிளப் மட்ட கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய பவுலர் காரெத் மோர்கன் ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார்.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி, ஆஸ்திரேலியாவில் டிவிஷன் கிளப் மட்ட கிரிக்கெட் போட்டி ஒன்றில் சர்ஃபர்ஸ் பாரடைஸ் சிசி மற்றும் முத்கீரபா நேரங் அண்ட் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் மோதின. 40 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில், முத்கீரபா நேரங் அண்ட் டிஸ்ட்ரிக்ட்ஸ் முதலில் பேட் செய்து 178 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய சர்ஃபர்ஸ் பாரடைஸ் சிசி அணி 39 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் வெற்றி என்ற நிலையில், முத்கீரபா அணியின் கேப்டன் காரெத் மோர்கன், பந்துவீசினார்.
இதில் முதல் 4 பந்துகளில் 4 பேட்டர்களும் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தனர். கடைசி 2 விக்கெட்டுகள் போல்டு முறையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 6 பந்துகளில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி பவுலர் மோர்கன் சாதனை படைத்தார். இதில் 5 பேட்டர்கள் கோல்டன் டக் அவுட் ஆகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே சர்பர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேக் கார்லண்டை வீழ்த்திய மோர்கன், கடைசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மொத்தம் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திகைப்பூட்டும்விதமாக தன் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
இந்த சாதனை குறித்து மோர்கன், “கடைசி ஓவரை வீச இளம் பவுலர் தயாராக இருந்தார். அப்போதுதான் நான் முடிவெடுத்தேன், நான்தான் கடைசி ஓவரை வீச வேண்டும், நான் வீசினால் அவர்களால் 4 ரன்களை எடுத்து வெற்றிபெற முடியாது என்று கருதினேன். முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள் என்றவுடன் ஹாட்ரிக் எடுத்துவிட்டோம். இனி இந்தப் போட்டியை தோற்பதில் அர்த்தமில்லை என்று உறுதியாக நம்பினேன். கடைசிப் பந்தில் ஸ்டம்புகள் பறந்தபோது என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. அணியில் அனைவரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டனர். யாருமே முதலில் நம்பவில்லை, என்ன நடந்தது என்பது புரிய கொஞ்ச நேரம் பிடித்தது. என் வாழ்க்கையின் சிறந்த தருணம், வரலாற்றில் இடம்பிடித்ததற்கு நன்றி” என்றார்.
இதேபோல், 1951ஆம் ஆண்டு நடைபெற்ற தாமஸ் ஹண்டர் கப் தொடரில் ஒரே ஓவரில் 6 விக்கெட் வீழ்த்தப்பட்டுள்ளது. அந்த ஆண்டு ரவ்லெண்ட் யூனைடேட் மற்றும் ராயல் யார்க்ஷேர் ரெஜிமெண்டல் அசோஷியேசன்(ஆர்.டபிள்யூ.ஆர்.ஏ) அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆர்.டபிள்யூ.ஆர் அணி 3 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ரவ்லெண்ட் யுனைடேட் அணியின் ஜி.ஹெச்.சிரேட் 6 பந்துகளில் 6 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இங்கிலாந்தின் பிலடெல்பியா கிரிக்கெட் கிளப் சார்பில் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. லாங்க்லே பார்க் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் லூக் ராபின்சன் (13) என்ற சிறுவன 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தான். அனைத்து விக்கெட்டுகளும் கிளீன் போல்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு (2022) நேபாள் நாட்டில் ப்ரோ கிளப் சாம்பியன்ஷிப்பின் போது புஷ் ஸ்போர்ட்ஸ் டெல்லி மற்றும் மலேசியா லெவன் அணிகள் மோதின. இதில், 19ஆவது ஓவரின் முடிவில் புஷ் ஸ்போர்ட்ஸ் அணி 131 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்திருந்தது. அப்போது ஆட்டத்தின் 20ஆவது ஓவரை மலேசியா லெவன் அணியின் விரேந்தீப் சிங் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை வைடாக வீசினார். அதன்பின்னர் அந்த ஓவரின் அனைத்துப் பந்துகளிலும் விக்கெட் விழுந்தது. அதில் ஒரு ஹாட்ரிக் மற்றும் ஒரு ரன் அவுட் என மொத்தமாக 6 பந்துகளில் 6 விக்கெட் வீழ்த்தினார்.
நடப்பு ஆண்டில் ஜூன் மாதத்தின்போது, ஆலிவர் வைட்ஹவுஸ் என்ற 12 வயது சிறுவன், குக்ஹிலுக்கு எதிராக ப்ரோம்ஸ்கிரோவ் கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடியபோது, 6 பந்துகளில் 6 பேட்டர்களை பெவிலியனுக்கு அனுப்பினார். ஆலிவர் இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்காமல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.