இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டியை இங்கிலாந்து வென்ற நிலையில், தொடரை முடிவுசெய்யும் மூன்றாவது டி20 போட்டி மழையால் ரத்துச்செய்யப்பட்டதால் தொடர் சமன் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் முதலிரண்டு போட்டிகளை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளையும் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமனில் வைத்தது.
இந்நிலையில் தொடரை முடிவு செய்யும் 5வது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 309 ரன்களை குவித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி ஆஸ்திரேலியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டு பவர்புல் பேட்டிங் யூனிட்டிற்கு இடையேயான மோதல் என்பதால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான அனைத்து போட்டிகளும் அனல் பறந்தன. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில், முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டக்கெட் 107 ரன்கள் குவித்து அணியை 309 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.
அதனைத்தொடர்ந்து 310 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய மேத்யூ ஷார்ட் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 7 ஓவர்களுக்கு 78 ரன்கள் என இருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தாலும், அடுத்துவந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜோஸ் இங்கிலீஸ் என அனைவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
20.4 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 162 ரன்களுடன் இருந்தபோது மழை குறுக்கிட்டு போட்டி தடைபட்டது. அந்த சூழலில் DLS முறைப்படி ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கை எட்டியிருந்த நிலையில், மீண்டும் போட்டி நடைபெறாத பட்சத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
3-2 என ஒருநாள் தொடரை முடித்த ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.