இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரானது 5 போட்டிகளாக நடத்தப்பட உள்ள நிலையில், அதன்மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடர் மட்டுமில்லாமல், இந்தியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடரையும் வென்றுள்ள இந்திய அணி, தொடர்ச்சியாக 4 முறை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா கடைசியாக 2014-ம் ஆண்டுதான் பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றிருந்தது.
2018, 2021 என இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியிருக்கும் இந்தியா மூன்றாவது முறையும் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் களம்காண உள்ளது. ஆனால் சொந்த மண்ணில் இன்னொரு டெஸ்ட் தொடரை இழக்க ஆஸ்திரேலியா அணி தயாராக இல்லை.
தொடர்ச்சியாக இரண்டு முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கும் நிலையில், இந்தமுறை தொடர்தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆஸ்திரேலியா வலுவான அணியை களமிறக்கியுள்ளது.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் எப்போதும் போல ‘டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், லபுசனே, மிட்செல் மார்ஸ், அலெக்ஸ் கேரி, நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட்’ முதலிய ஸ்டார் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கவாஜா மீண்டும் களமிறங்கவுள்ளார். ஜோஸ் இங்கிலீஸ், நாதன் மெக்ஸ்வீனி முதலிய வீரர்கள் அறிமுகத்தை பெற உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஒரு கலவையான அணியை ஆஸ்திரேலியா கொண்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லயன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.