ஆஸ்திரேலியாவின் கோட்டை என வர்ணிக்கப்படும் காபா மைதானம், பிரிஸ்பேன் நகரில் கடந்த 1895-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் தற்போது 37,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்டுள்ளது. இங்கு, 1931 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் பிரிஸ்பேன் நகரில் இருக்கும் காபா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, அதை இடித்துவிட்டு, மேலும் நவீன வசதிகளுடன் உருவாக்க ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது காபா மைதானம் கிரிக்கெட்டுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே 2025 ஆஷஸ் போட்டிக்குப் பிறகு, காபா மைதானம் இடிக்கப்பட்டு 2032 ஒலிம்பிக் போட்டிகளுக்காக மீண்டும் அதீத நவீன வசதிகளுடன் திறக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, 2.7 ஆஸ்திரேலிய மில்லியன் டாலர்கள் செலவில் புதிதாக கட்டப்பட உள்ளதாக குயின்ஸ்லாந்து மாகாண அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு முன் 1956ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மேலும் 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் சிட்னி நகரில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது 2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்போகும் 3வது ஆஸ்திரேலிய நகரமாக பிரிஸ்பேன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்காக காபா மைதானம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுந்தாற்போல புதிதாக கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
1988ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் தோல்வியைச் சந்தித்தது. அதன்பின் தொடர்ச்சியாக அனைத்து எதிரணிகளையும் அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2021 பார்டர் – கவாஸ்கர் கோப்பையின்போது சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தின்போது, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் “காபாவுக்கு வாருங்கள்” என்று சவால் விடுக்கும் வகையில் அறைகூவல் விடுத்தார்.
அதாவது, ’32 வருடங்களாகத் தோல்வியைச் சந்திக்காத எங்களின் கோட்டை மைதானத்தில் கண்டிப்பாக கடைசிப் போட்டியில் உங்களை தோற்கடித்து கோப்பையை வெல்வோம்’ என்று அவர் இந்தியாவுக்கு சவால் விட்டார். உண்மையில், இந்திய அணி காபாவில் ஒருமுறைகூட வெற்றிபெற்றது கிடையாது.
மேலும், இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி போன்றவர்கள் இல்லாமல் இளம் வீரர்கள் மட்டுமே இருந்ததால், தோல்வி நிச்சயம் என்றுதான் நினைக்கத் தோன்றியது. அந்த நிலைமையில் நடைபெற்ற 4-வது போட்டியில் முக்கிய வீரர்கள் அனைவரும் காயமடைந்ததால் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா, அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுடன், அவர்களின் வெற்றிக் கோட்டையான காபாவை தகர்த்து வரலாற்றில் இடம்பிடித்தது ரஹானே தலைமையிலான இளம்படை.
இதையும் படிக்க: 2024 மகளிர் ஐபிஎல்: டிசம்பர் 9 மும்பையில் ஏலம்!
இந்த மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது குறித்து அப்போது ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, “உண்மையில் இது பாராட்டக்கூடியது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவை மனதளவில் வீழ்த்தியது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா அப்போட்டியில் வெற்றிபெற்றதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இப்படி, இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த அந்த மைதானம்தான் தற்போது இடிக்கப்பட உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இதே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணி பவுலர்கள் சார்பிலும் மொத்தமாக 34 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது, டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் செயல் என தொடங்கி பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழலில் காபா ஆடுகளத்தை ஆய்வுசெய்த ஐசிசி, ’மைதானத்தின் ஆடுகளம் சராசரிக்கும் கீழ் என்ற ரேட்டிங்கை பெற்றிருக்கிறது’ என தெரிவித்திருந்தது.