ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
முதலில் தொடங்கப்பட்ட 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் ஒரு அசாத்தியமான பந்துவீச்சு மூலம் அசத்திய ஷமர் ஜோசப் 1-1 என டெஸ்ட் தொடரை சமனில் முடித்துவைத்தார். 27 வருடங்களுக்கு பிறகு முதன்முதலாக ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றது மட்டுமல்லாமல், பல வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை சமன்செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்நிலையில் இன்று தொடங்கப்பட்ட 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அசத்தலான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
மெல்போர்னில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, 25 வயதான அறிமுக வீரர் சேவியர் பார்ட்லெட் தனது முதல் போட்டியில் முதல் ஓவரை வீசினார். அவுட் ஸ்விங், இன் ஸ்விங் என கலக்கிய அவர் டாப் ஆர்டர் வீரர்களை சொற்ப ரன்களில் வெளியேற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடக்கத்திலேயே பின்னுக்கு தள்ளினார்.
59 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கார்டி மற்றும் சேஸ் இருவரின் அரைசதத்தால் 10 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. அறிமுக போட்டியிலேயே 9 ஓவரை வீசி மெய்டன் உட்பட 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த பார்லெட், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
232 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் கெட் முதல் ஓவரிலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அதற்கு பிறகு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் இங்கிலிஸ், கேம்ரான் கிரீன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அரைசதமடித்து ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.
4 விக்கெட்டுகளை வீழ்த்திய பார்ட்லெட் அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை பெற்று அசத்தினார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.