தென்னாப்பிரிக்காவில் நடந்துவந்த 2024 யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது பரபரப்பான மோதலுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. யு19 உலகக்கோப்பையை வெல்ல 16 அணிகள் போட்டிப்போட்ட நிலையில், சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தின.
விறுவிறுப்பாக நடந்துமுடிந்த அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2 விக்கெட்டுகள் மற்றும் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டியானது தென்னாப்பிரிக்காவின் பெனோனி, வில்லோமூர் பார்க்கில் இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 253 ரன்களை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. நல்ல டோட்டலை போர்டில் போட்டு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க நினைத்த ஆஸ்திரேலியா அணிக்கு, தொடக்க வீரர் சாம் கான்ஸ்டஸை 0 ரன்னில் வெளியேற்றிய லிம்பனி அதிர்ச்சி கொடுத்தார்.
முதல் விக்கெட்டை விரைவாகவே இழந்த போதிலும் அடுத்து கைக்கோர்த்த கேப்டன் ஹக் வெய்ப்ஜென் மற்றும் ஹாரி டிக்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நெருங்கிய இந்த கூட்டணியை வெய்ப்ஜெனை 48 ரன்னிலும், ஹாரியை 42 ரன்னிலும் பிரித்துவைத்தார் நமன் திவாரி.
நிலைத்து நின்ற இரண்டு வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினாலும், மிடில் ஆர்டர் வீரர்களாக களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங் மற்றும் ஒலிவர் பீக் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்ஜாஸ் சிங் 55 ரன்களும், ஒலிவர் 46 ரன்களும் அடிக்க 50 ஓவர் முடிவில் 253 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா அணி.
1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 36 ஆண்டுகால யு19 உலகக்கோப்பை வரலாற்றில், 1998ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஒரு இறுதிப்போட்டியில் 253 ரன்கள் என்ற பெரிய டோட்டலை போட்டது ஆஸ்திரேலியா அணி.
ஒரு யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக, 1998-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து நிர்ணயித்த 242/3 என்ற ரன்களே சிறந்த ஸ்கோராக இருந்தது.
இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இமாலய சாதனையை முறியடித்து ஆஸ்திரேலியா அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்து அசத்தியது.
254 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு எதிராக சிறப்பான வேகப்பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி, இந்திய வீரர்கள் மீது அழுத்தம் போட்டது. தொடக்கத்தில் நிதானமாக தொடங்கலாம் என விளையாடிய இந்திய வீரர்கள், அதிகப்படியான டாட் பந்துகளின் காரணமாக அழுத்தத்தை எதிர்கொண்டனர்.
தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, தடுமாறிய இந்திய வீரர்கள் அவர்களாகவே விக்கெட்டை தேடித்தேடி விட்டுக்கொடுத்தனர். லீக்கில் சதமடித்த 4 இந்திய வீரர்களில் ஒருவர் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் 122 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற, 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆல்ரவுண்டர் முருகன் அபிஷேக் மட்டும் இந்தியாவிற்காக போராடினார். ஆனால் அவரும் 42 ரன்களுக்கு வெளியேற, இந்திய அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
2010ம் ஆண்டுக்கு பிறகு யு19 உலகக்கோப்பையை வெல்லாமல் தடுமாறி வந்த ஆஸ்திரேலிய அணி, 1988, 2002, 2010-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிகளுக்கு பிறகு 14 வருடங்கள் கழித்து 4வது யு19 உலகக்கோப்பையை வென்று ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.
கடந்த 9 மாதங்களில் ஐசிசியின் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் தற்போது 2024 யு19 உலகக்கோப்பைகள் என மூன்று உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.