இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்மித் 110 ரன்களும், டேவிட் ஹெட் 73 பந்துகளில் 77 ரன்களும், டேவிட் வார்னர் 66 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து சார்பில் ராபின்சன், ஜோஷ் டங் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக பென் டக்கெட் 98 ரன்கள் எடுத்தார். ஹேரி ப்ரூக் 50, ஜாக் க்ராவ்லே 48, ஒல்லி போப் 42 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய சார்பில் மிட்சல் ஸ்டார்க் 3, ஹசல்வுட், டேவிஸ் ஹெட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
91 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 77 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட் வீழ்த்தினார்.
371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தனி ஆளாக பென் டக்கெட் போராட்ட 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. அப்போது டக்கெட் உடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.
இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர் ஷிப் அமைத்தது. 83 ரன்கள் எடுத்த நிலையில் டக்கெட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பிறகு வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்ட தனி ஒருவனாக களத்தில் நின்று அதிரடி காட்டினார் ஸ்டோக்ஸ். சிக்ஸர் பவுண்டரிகளாகவும் பறக்கவிட்டார். இறுதியில் பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர் தலா 9 பவுண்டரி, சிக்ஸர் விளாசி இருந்தார். இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு பூஜ்ஜியம் என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. பேர்ஸ்ட்டோவின் அவுட் சிறிது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.