ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு; பாகிஸ்தானில் விளையாடுகிறதா இந்தியா?-முழுவிபரம்

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தேதிகளை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.
INDvsPAK
INDvsPAKTwitter
Published on

ஆசியக் கோப்பை டி20 தொடர் கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்ற நிலையில், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி 6-வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. இந்த தொடரில் இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியுற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்நிலையில், ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹைபிரிட் மாடலின் படி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

அதன்படி, வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 13 போட்டிகளில் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடரில் முதன்முறையாக நேபாள நாடு பங்கேற்கின்றது. இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்படுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு குழுவிலும், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றொரு குழுவிலும் இடம் பெறுகின்றன.

இரண்டு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் பங்கேற்கும். இந்த சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும். இந்தப் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது.

இந்திய அணி நீண்ட வருடங்களாகவே பாகிஸ்தான் சென்று விளையாடத நிலையில், இந்திய அணி பங்குபெறும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்பிருக்கிறதா என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடுமா?

இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட விருப்பம் தெரிவிக்காத நிலையில், அதற்கேற்ப போட்டி நடைபெறும் இடங்கள் முடிவு செய்யப்படும். மொத்தம் 6 லீக் போட்டிகள், 6 குரூப் 4 போட்டிகள் ஒரு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. லீக் போட்டிகள் மட்டுமே எந்தெந்த அணிகள் என்று சொல்ல முடியும். குரூப் 4 அணிகள் வெற்றி தோல்விகளை பொறுத்தே முடிவு ஆகும். லீக் சுற்றின் 6 போட்டிகளில் இந்தியா விளையாடும் போட்டிகளை தவிர்த்து மற்ற 4 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் மற்றும் நேபாள் உடன் இந்தியா விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட உள்ளன. குரூப் 4 மற்றும் இறுதிப் போட்டி அனைத்தும் இலங்கையில் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com