ஆசியக்கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. லாஹூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய அந்த அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் 4 விக்கெட்களையும் நசீம் ஷா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஷாகீன் அஃப்ரிடி, ஃபஹீம் அஷ்ரஃப், இஃப்திகார் அஹமது தலா 1 விக்கெடை வீழ்த்தினர்.
எளிய இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 194 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இமாம் உல் ஹக் 78 ரன்களையும் முஹம்மது ரிஸ்வான் 63 ரன்களையும் எடுத்தனர். ஆட்டநாயகனாக ஹாரிஸ் ராஃப் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்த ஹாரிஸ் ராஃப் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்களை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் வாக்கர் யூனிஸ் உடன் 3 ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் இடத்தில் ஹாசன் அலி உள்ளார். இவர் 24 போட்டிகளில் இச்சாதனையைப் படித்துள்ளார். 25 போட்டிகளில் இச்சாதனையை படைத்த ஷாகின் ஷா அஃப்ரிடி 2 ஆவது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 5 ஆவது விக்கெட் அல்லது அதற்கும் கீழ் களமிறங்கி அதிகமுறை 100 ரன்களை பார்ட்னர்ஷி அமைத்த ஜோடிகளில் ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்தஃபிஷர் ரஹீம் இரண்டாம் இடத்தை தோனி மற்றும் யுவராஜ் சிங் உடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த ஜோடிகள் 5 முறை 100 ரன்கள் அல்லது அதற்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. முதல் இடத்தில் தோனி மற்றும் ரெய்னா கூட்டணி உள்ளது. இந்த ஜோடி 6 முறை இச்சாதனையை படைத்துள்ளது.
நேற்று நடந்த போட்டியில் வென்றதன் மூலம், ஆசிய போட்டிகளில் குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. பங்களாதேஷ் அணியுடன் 14 முறை மோதியுள்ள பாகிஸ்தான் அதில் 13 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.