இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சாக் கிராவ்லியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மைல்கல் சாதனையை எட்டினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய உலக கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில், முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708), ஜேமி ஆண்டர்சன் (696), அனில் கும்ப்ளே (619), ஸ்டூவர்ட் பிராட் (604), க்ளென் மெக்ராத் (563), வால்ஸ் (519), நாதம் லயன் (517) முதலிய 8 வீரர்களுக்கு பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய 9வது உலக பவுலராக அஸ்வின் மாறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் மற்றும் அனில் கும்ப்ளேவிற்க்கு பிறகு இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார். மேலும் குறைவான பந்துகளில் 500 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒரேயொரு ஸ்பின்னராக அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் 500 டெஸ்ட் விக்கெட் மைல்கல் குறித்து பேசியிருக்கும் அவர், “தான் தற்செயலாக மாறிய ஒரு ஸ்பின்னர்” என்று கூறினார்.
500 விக்கெட்டுகள் வீழ்த்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், “நான் தற்செயலாக தான் ஸ்பின்னராக மாறினேன், உண்மையில் நான் ஒரு பேட்டராக மட்டுமே இருக்க விரும்பினேன். ஆனால் ஸ்பின்னராக மாற வாழ்க்கை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது, நான் சிஎஸ்கே டிரஸ்ஸிங் அறைக்குள் நுழைந்தேன். ஆனால் அப்போது அணியிலிருந்து முத்தையா முரளிதரன் நான் புதிய பந்தில் பந்து வீசுவதை விரும்பவில்லை. இறுதியில், நான் புதிய பந்தைக் கையில் எடுத்து அதிலும் வெற்றிகரமாக கடந்தேன்.
என்னுடைய முதல்தர கிரிக்கெட் பயணம் நல்லபடியாகவே இருந்தது. இருப்பினும் ஐ.பி.எல் மேடை தான் நிறைய பேரின் பார்வைக்கு என்னை கொண்டு சென்றது. இறுதியில் எனது டெஸ்ட் அறிமுகம் கிடைத்தது. ஆனால் அப்போது நீயேல்லாம் நல்ல டெஸ்ட் பவுலரா என்பது போல், நான் ஒரு டெஸ்ட் பந்துவீச்சாளராக முடியுமா என்று பலர் என்னை சந்தேகித்தார்கள். 13 வருடங்கள் ஆகிவிட்டது நான் இன்னும் இங்கே தான் இருக்கிறேன். அதனால் எதுவும் மோசமாக மாறவில்லை, நான் தற்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அஸ்வின் பேசியுள்ளார்.