இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரண்டு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 நாள் ஆட்டம் தடைபட்டு 4வது நாளில் போட்டி நடைபெற்றது. இந்திய பவுலர்களின் அசத்தலான பந்துவீச்சால் வங்கதேச அணி 233 ரன்களுக்கு சுருண்டது. அதன்பிறகு விளையாடிய இந்திய அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய 9 விக்கெட்டுகளுக்கு 285 ரன்கள் இருந்தபோது டிக்ளார் செய்தது.
52 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணி, அஸ்வின், பும்ரா மற்றும் ஜடேஜாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 146 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அஸ்வின், பும்ரா, ஜடேஜா அனைவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸை போலவே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வாலின் அதிரடியான அரைசதத்தால் 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் அடித்த இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
2-0 என தொடரை வென்ற இந்தியா அசத்தியது. ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்மூலம் 11வது முறையாக தொடர்நாயகன் விருதை வென்ற அஸ்வின், குறைவான (42) டெஸ்ட் தொடர்களில் விளையாடி அதிகமுறை தொடர்நாயகன் விருதுவென்ற வீரராக மாறி சாதனை படைத்தார்.
இந்தப்பட்டியலில் 11 முறை தொடர்நாயகன் விருது வென்று முத்தையா முரளிதரன் சமநிலையில் இருந்தாலும், அவர் 50 டெஸ்ட் தொடர்களில் விளையாடி மட்டுமே வென்றுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் முரளிதரனின் இந்த பிரத்யேக சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.