நடப்பு 2023 உலகக்கோப்பையில் அனைத்து இந்திய வீரர்களும் அவரவர்களுடைய பாத்திரத்தில் கனக்கச்சிதமாக செயல்பட்டு வருகின்றனர். ஒருவர் போனால் ஒருவர் என ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆட்டநாயகன் வெளிவருகிறார்கள். இந்திய வீரர்களின் ஒற்றுமையான இந்த செயல்பாடுதான் விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றிபெற்று இந்தியாவை இறுதிப்போட்டிக்கு எடுத்துச்சென்றுள்ளது.
இருப்பினும் ஒரு சார்பான ரசிகர்கள் விராட் கோலியின் மெதுவான மற்றும் நிதானமான ஆட்டத்தை விமர்சனம் செய்வதோடு, ரோகித்தின் அதிரடியான ஆட்டத்தையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஒருபக்கம் அதிரடியாக ஆடாவிட்டால் ஒரு விமர்சனமும், மறுபக்கம் ஏன் அதிரடியாக ஆடி உடனடியாக வெளியேறிவிடுகிறார் என மற்றுமொரு விமர்சனமும் வைக்கப்படுகிறது. இந்நிலையில்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் புரிதல் ஆட்டம்தான் என முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா "RO-KO" கூட்டணியை புகழ்ந்து பேசியுள்ளார்.
ரோகித் மற்றும் கோலியின் இருவேறு ஆட்ட அணுகுமுறை குறித்து பேசியிருக்கும் நெஹ்ரா, “ரோகித் சர்மா ஏன் மிகவும் பயமின்றியும், ஆக்ரோஷமாகவும் விளையாடுகிறார் என்றால், அவருக்கு பிறகு களத்தில் விராட் கோலி இருப்பார் என்ற நம்பிக்கையில்தான். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவதால்தான், விராட் கோலியால் தனது நேரத்தை செலவிட்டு நின்று விளையாடமுடிகிறது. இவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகத் தோன்றுகிறார்கள், அணிக்காக சேர்ந்து ஒன்றாக போராடுகிறார்கள்” என இருவரின் அணுகுமுறை குறித்தும் பாராட்டி CricBuzz உடன் நெஹ்ரா பேசியுள்ளார்.
உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக பேசியிருந்த ரோகித் சர்மா, “இந்த உலகக்கோப்பையில் நானோ அல்லது கோலியோ சதங்கள் அடிப்பது முக்கியமில்லை. எங்களுடைய ஆன்மாவின் முழு கவனமும் 2023 உலகக்கோப்பையை வெல்ல மட்டுமே போராடும்” எனக் கூறியிருந்தார். தற்போது இந்த இரண்டு மூத்த வீரர்களும் ஒருசேர கோப்பைக்காக போராடிவருகின்றனர்.
1983, 2011 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு 3வது முறையாக இந்தியா கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் போட்டியில் உலகக்கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.