இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடரில் விளையாடாமல் இருந்துவருகின்றன. இருநாட்டிற்கும் இடையே இருக்கும் அரசியல் பதற்றம் காரணமாக இருநாட்டின் கிரிக்கெட் அணிகளும் இருதரப்பு தொடர்களில் இருந்து விலகியே இருக்கின்றன. விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்று கூறினாலும் இந்தியா போதுமானவரை பாகிஸ்தானிடம் இருந்து விலகியே இருக்கிறது.
நடப்பு ஆசியக்கோப்பை தொடர் கூட முதலில் பாகிஸ்தானில் நடத்துவதாகதான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து தொடரின் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு என பிரித்து நடத்தப்பட்டன. இந்தியாவின் போட்டிகள் முழுக்க இலங்கையில் உள்ள மைதானத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் இந்திய ஆடுகளங்களில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடாது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை இருநாட்டிற்கும் இடையே எந்தவிதமான இருதரப்பு தொடர் போட்டிகளிலும் இந்தியா விளையாடாது என்று பிசிசிஐ நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தது. எல்லையில் தாக்குதல் அல்லது ஊடுருவல் சம்பவங்களை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை மீண்டும் தொடங்க மாட்டோம்” என்று பிசிசிஐயின் முன்னாள் தலைவரான தாக்கூர் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2012-13 இருதரப்பு தொடரில் விளையாடின. அதன்பிறகு இரு நாடுகளும் ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தொடரில் மட்டுமே நேருக்கு நேர் மோதிவருகின்றன. இந்தியா கடைசியாக 2006-ம் ஆண்டு பாகிஸ்தானிற்கு சென்று இருதரப்பு தொடரில் விளையாடியது.