பெண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் குறைந்த அளவே நடந்துவரும் நிலையில், சமீபத்தில் 347 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்தது, 23 வருடங்களுக்கு பிறகு 22 வயதில் அதிவேக இரட்டை டெஸ்ட் சதம் என தொடர்ந்து வீராங்கனைகள் பெண்கள் கிரிக்கெட்டிலும் டெஸ்ட் வடிவத்தின் முக்கியத்துவத்தை நிரூபித்து வருகின்றனர்.
அந்தவகையில் 90 வருட பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகப்படியான டெஸ்ட் டோட்டலை பதிவுசெய்து வரலாறு படைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 575 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி. இதன்மூலம் ஏற்கனவே அந்த அணி படைத்திருந்த 569 ரன்கள் ரெக்கார்டை அந்த அணியே முறியடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வீராங்கனையான அனபெல் சதர்லேண்ட் 210 ரன்கள் குவித்து தனியொரு ஆளாக ஒரு மைல்கல் சாதனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டியானது நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்த ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. சொந்த மண்ணில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி, முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவை வெறும் 76 ரன்களுக்கு சுட்டியது. அபாரமாக பந்துவீசிய டார்சி பிரவுன் மற்றும் அனபெல் சதர்லாண்ட் இருவரும் 5 விக்கெட்டுகள் மற்றும் 3 விக்கெட்டுகள் என வீழ்த்தி அசத்தினர்.
பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு 12 ரன்களில் 3 விக்கெட்டை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். ஆனால் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மூனி மற்றும் கேப்டன் ஹீலி இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மூனி 78 ரன்களூம், ஹீலி 99 ரன்களும் எடுத்து வெளியேற ஆஸ்திரேலியா அணி 250 ரன்களை தொட்டது. எப்படியும் இதற்கு மேல் ஆஸ்திரேலியா 100 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என்று தான் எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் தனியொரு ஆளாக ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினார் 6வது வீரராக களமிறங்கிய அனபெல் சதர்லாண்ட். ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், வெறும் 248 பந்துகளிலேயே 200 ரன்களை பதிவுசெய்து உலகசாதனையை முறியடித்து தன் பெயரில் எழுதினார். சர்வதேச பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2001-ம் ஆண்டு குறைவான பந்துகளில் (306) இரட்டை சதமடித்த கரேன் ரோல்டனின் சாதனையை முறியடித்துள்ளார் சதர்லாண்ட்.
அனபெல் சதர்லண்ட்டின் 210 ரன்கள் ஆட்டத்தால் 575 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா அணி. இதன்மூலம் சர்வதேச பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப்படியான இன்னிங்ஸ் டோட்டலை பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி.
பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இன்னிங்ஸ் டோட்டல்:
ஆஸ்திரேலியா - 575/9d vs தென் ஆப்பிரிக்கா பெர்த்தில் - 2024
ஆஸ்திரேலியா – 569/6d vs இங்கிலாந்து குல்ட்ஃபோர்டில் – 1998
ஆஸ்திரேலியா – 525 vs இந்தியா அகமதாபாத்தில் – 1984
நியூசிலாந்து – 517/8 vs இங்கிலாந்து ஸ்கார்பரோவில் – 1996