வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனின் செயல் மோசமானது என இலங்கை வீரர் மேத்யூஸ் விமர்சித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக டைம் அவுட் விதி மூலம் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூஸ், “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. 2 நிமிடத்தில்தான் மைதானத்திற்குள் வந்தேன். ஹெல்மெட்டில் இருந்த பிரச்னை காரணமாக மாற்றச் சென்றதால் காலதாமதம் ஏற்பட்டது” என விளக்கமளித்தார்.
மேலும் “வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் எனக் கூறும்போது இது எப்படி தவறாகும்? ஹெல்மெட் இல்லாமல் விளையாடலாமா?” என மேத்யூஸ் கேள்வி எழுப்பினார். போட்டி முடிந்ததும் கைகுலுக்கமால் சென்றது குறித்து கேள்விக்கு, “அவர்கள் மதித்தால், நாங்களும் மதிப்போம்” என மேத்யூஸ் பதிலளித்தார்.
இச்சம்பவம் குறித்து பேசிய ஷகிப் அல் ஹசன், “ஐசிசி விதிகளின் படி 2 நிமிடத்தில் BAT, PAD, HELMET என அனைத்துடனும் பேட்டர் களத்தில் இருக்க வேண்டும். எனவே, இச்சம்பவம் குறித்து நான் கவலைப்படவில்லை. விதியின்படியே செயல்பட்டேன். இது விமர்சிக்கப்படுமானால், ஐசிசி விதியை மாற்றிக் கொள்ளட்டும்” என்று பதிலளித்துச் சென்றார்.