இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது, பெரும்பாலான கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறிய கருத்து “பாஸ்பால் VS இந்திய ஸ்பின்னர்கள்” இந்த இரண்டு மோதலை பார்க்க சுவாரசியமாக இருக்கப்போகிறது என்பதுதான். ஒருபுறம் இந்திய ஜாம்பவான்கள் இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக இங்கிலாந்தால் ஒன்றும் செய்யமுடியாது என கூறினாலும், களத்தில் நடந்தது என்னவோ வேறாகவே இருந்தது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பாஸ்பால் அட்டாக்கை இந்திய ஸ்பின்னர்கள் சிறப்பாக வீழ்த்தினார்கள் என்று சொல்லும்படியாகதான் போட்டி இருந்தது. அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் 3 பேரும் சேர்ந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கே சுருட்டது. பின்னர் முதல் இன்னிங்ஸில் 436 ரன்களை குவித்த இந்திய அணி, 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டதாகவே நினைக்கத்தோன்றியது.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை 163 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், இந்திய ஸ்பின்னர்களால் இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்யமுடியவில்லை. ஒல்லி போப் ஒருவர்தான் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப், ஸ்கூப் ஷாட்கள் எல்லாம் விளையாடி ரன்களை எடுத்துவந்தார். 7வது, 8வது மற்றும் 9வது நிலை வீரராக களமிறங்கிய பென் ஃபோக்ஸ், ரெகன் அகமது, டாம் ஹார்ட்லி முதலிய வீரர்களின் விக்கெட்டுகளை கூட இந்திய ஸ்பின்னர்களால் வீழ்த்த முடியவில்லை. இதன்காரணமாக இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 231 ரன்களை செட் செய்தது.
எளிதாக வென்றுவிடலாம் என களமிறங்கிய இந்திய அணிக்கு இங்கிலாந்து ஸ்பின்னர்கள் பெரிய செக் வைத்தனர். அதன்படி ஜோ ரூட் கேஎல் ராகுலையும், ஜாக் லீச் ஸ்ரேயாஸ் ஐயரையும் வெளியேற்ற 7 விக்கெட்டுகளை தனியாளாய் வீழ்த்திய டாம் ஹார்ட்லி இந்திய மண்ணில் ஒரு வரலாற்று வெற்றியை இங்கிலாந்து அணிக்கு தேடித்தந்தார்.
இந்திய ஸ்பின்னர்கள் : மொத்தம் 14 விக்கெட்டுகள்
1. அஸ்வின் : 50 ஓவர்கள் - 194 ரன்கள் - 6 விக்கெட்டுகள் - 3.88 எக்கானமி
2. ஜடேஜா : 52 ஓவர்கள் - 219 ரன்கள் - 5 விக்கெட்டுகள் - 4.22 எக்கானமி
3. அக்சர் : 29 ஓவர்கள் - 107 ரன்கள் - 3 விக்கெட்டுகள் - 3.69 எக்கானமி
இங்கிலாந்து ஸ்பின்னர்கள் : மொத்தம் 18 விக்கெட்டுகள்
1. டாம் ஹார்ட்லி : 51.2 ஓவர்கள் - 193 ரன்கள் - 9 விக்கெட்டுகள் - 3.76 எக்கானமி
2. ஜாக் லீச் : 36 ஓவர்கள் - 96 ரன்கள் - 2 விக்கெட்டுகள் - 2.67 எக்கானமி
3. ரெகன் அகமது : 30 ஓவர்கள் - 138 ரன்கள் - 2 விக்கெட்டுகள் - 4.60 எக்கானமி
4. ஜோ ரூட் : 48 ஓவர்கள் - 120 ரன்கள் - 5 விக்கெட்டுகள் - 2.50 எக்கானமி
இரண்டாவது டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தாலும் அதில் பெரியபங்கானது வேகப்பந்துவீச்சாளர் பும்ராவையே சாரும். அவர் ஒருவர் மட்டுமே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். மாறாக 3 இந்திய ஸ்பின்னர்கள் சேர்ந்து 9 விக்கெட்டுகளையே எடுத்திருந்தனர்.
ஆனால் இங்கிலாந்து ஸ்பின்னர்கள் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அதில் இந்திய ஸ்பின்னர்களின் எக்கானமியை விட இங்கிலாந்து ஸ்பின்னர்களின் எக்கானமி சிறப்பானதாகவே இருந்தது. அதேபோல விக்கெட் வீழ்த்தும் சராசரியும் இந்திய ஸ்பின்னர்களை விட இங்கிலாந்து ஸ்பின்னர்கள் அதிகமாகவே கொண்டிருந்தனர்.
இந்திய ஸ்பின்னர்கள் : மொத்தம் 9 விக்கெட்டுகள்
1. அஸ்வின் : 30 ஓவர்கள் - 133 ரன்கள் - 3 விக்கெட்டுகள் - 4.43 எக்கானமி
2. குல்தீப் : 32 ஓவர்கள் - 131 ரன்கள் - 4 விக்கெட்டுகள் - 4.09 எக்கானமி
3. அக்சர் : 18 ஓவர்கள் - 99 ரன்கள் - 2 விக்கெட்டுகள் - 5.50 எக்கானமி
இங்கிலாந்து ஸ்பின்னர்கள் : மொத்தம் 15 விக்கெட்டுகள்
1. டாம் ஹார்ட்லி : 45 ஓவர்கள் - 151 ரன்கள் - 5 விக்கெட்டுகள் - 3.36 எக்கானமி
2. சோயப் பஷீர் : 53 ஓவர்கள் - 196 ரன்கள் - 4 விக்கெட்டுகள் - 3.70 எக்கானமி
3. ரெகன் அகமது : 41.3 ஓவர்கள் - 153 ரன்கள் - 6 விக்கெட்டுகள் - 3.69 எக்கானமி
4. ஜோ ரூட் : 16 ஓவர்கள் - 72 ரன்கள் - 0 விக்கெட்டுகள் - 2.50 எக்கானமி
மொத்தமாக இந்திய ஸ்பின்னர்கள் 23 விக்கெட்டுகளும், இங்கிலாந்து ஸ்பின்னர்கள் 33 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து ஸ்பின்னர்கள் ஒருவர் கூட 4 எக்கானமி ரேட்டை தொடவில்லை, ஆனால் அனைத்து இந்திய ஸ்பின்னர்களும் 4 ரன்களுக்கு மேலான எக்கானமியையே கொண்டுள்ளனர்.
மொத்த புள்ளிவிவரம்:
இங்கிலாந்து : 320.5 ஒவர்கள் - 1119 ரன்கள் - 33 விக்கெட்டுகள் - 3.48 எக்கனாமி - 1முறை 5 விக்கெட்டுகள்
இந்தியா : 211 ஒவர்கள் - 883 ரன்கள் - 23 விக்கெட்டுகள் - 4.18 எக்கனாமி - 0 ஐந்து விக்கெட்டுகள்
கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தொடரை தோற்ற போதும் கூட எக்கானமியில் இந்திய ஸ்பின்னர்கள் இவ்வளவு மோசமானதாக இருக்கவில்லை. அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் கம்பேக் கொடுக்கவேண்டிய பொறுப்பு இந்திய ஸ்பின்னர்களுக்கு மட்டுமல்லாமல், இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் அதிகமாகவே இருக்கிறது.