போட்டி 15: தென்னாப்பிரிக்கா vs நெதர்லாந்து
முடிவு: 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி (நெதர்லாந்து - 245/8; தென்னாப்பிரிக்கா - 207 ஆல் அவுட், 42.5 ஓவர்கள்)
குறிப்பு: மழை காரணமாக ஆட்டம் 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
ஆட்ட நாயகன்: ஸ்காட் எட்வர்ட்ஸ் (நெதர்லாந்து)
பேட்டிங்: 69 பந்துகளில் 78 ரன்கள் (10 ஃபோர்கள், 1 சிக்ஸர்)
ஃபீல்டிங்: 3 கேட்ச்கள்
ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டோடு களமிறங்கியபோது நெதர்லாந்து அணி மிக மோசமான நிலையில் இருந்தது. 20.2 ஓவர்கள் முடிவில் 82 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது அந்த அணி. விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெரும்பாலான வீரர்கள் ஆடியிருப்பார்கள். ஆனால் அது மட்டுமல்லாமல் ரன் ரேட்டை சீராக்கவேண்டிய வேலையையும் செய்தார் எட்வர்ட்ஸ். மஹாராஜ் பந்துவீச வந்தபோது தான் சந்தித்த முதல் பந்தையே ஸ்வீப் செய்து பௌண்டரியாக்கினார் அவர். சுழலை எதிர்கொள்ளும்போது தொடர்ந்து ஸ்வீப் ஷாட்கள் ஆட முயற்சி செய்துகொண்டே இருந்தார். ஒவ்வொரு முயற்சியும் வெற்றிகரமாக இல்லை என்றாலும், எப்படியேனும் ஒருசில ரன்கள் வந்துகொண்டே இருந்தன. மஹாராஜின் ஓவர்களில் மட்டும் ஃபோர்கள் அடித்துவந்த அவர், வேகப்பந்துவீச்சாளர்களின் தவறான பந்துகளை தண்டிக்கவும் தவறவில்லை. 33வது ஓவரில் ரபாடா ஷார்டாக வீசிய பந்தை சிக்ஸராக்கினார் அவர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தாலும், எட்வர்ட்ஸ் வேரூன்றி நின்றார். அதனால் கடைசி கட்டத்தில் களமிறங்கிய வேன் டெர் மெர்வ், ஆர்யன் தத் போன்ற வீரர்கள் முழு சுதந்திரத்தோடு விளாசினார்கள். அதனால் கடைசி கட்டத்தில் புயல் வேகத்தில் ரன்கள் கிடைத்தது. ரபாடா, எங்கிடி ஆகியோரின் பந்துகளிலும் ஃபோர்கள் அடித்து அசத்திய அவர், அதிரடியாக அடித்துக்கொண்டிருந்த பௌலர்களுக்கு ஸ்டிரைக்கும் கொடுத்து நெதர்லாந்து அணியின் ரன்ரேட் மளமளவென உயரக் காரணமாக இருந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து நெதர்லாந்து அணி ஒரு மிகச் சிறந்த ஸ்கோர் எடுக்க உதவி புரிந்தார் அவர்.
அதே உத்வேகத்தோடு அடுத்த இன்னிங்ஸிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார் எட்வர்ட்ஸ். பவர்பிளேவில், இரண்டு எண்டில் இருந்தும் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தி தென்னாப்பிரிக்க ஓப்பனர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் அவர். அதை ஒரு விதமாக அட்டாக்கிங் முடிவு என்றும் சொல்லலாம், டிஃபன்ஸிவ் முடிவு என்றும் சொல்லலாம். ஒருபக்கம் டி காக் விக்கெட்டை டார்கெட் செய்தார். மறுபக்கம், இரவு பனிப்பொழிவு அதிகமாகும் முன்பே ஸ்பின்னர்களை நல்லபடியாக பயன்படுத்தினார். இந்த முடிவு அவர்கள் எதிர்பார்த்த பதிலையும் கொடுத்தது. டி காக் விக்கெட்டை அகெர்மேன் வெளியேற்றினார். அதிலிருந்து மீளாமல் தென்னாப்பிரிக்கா தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. சற்றும் தயக்கம் காட்டாமல் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கை ஸ்பின்னராக வேன் டெர் மெர்வை பயன்படுத்தியதும் அவர் இந்தப் போட்டியில் எடுத்து அட்டகாச முடிவுகளுள் ஒன்று. இதுமட்டுமல்லாமல் 3 கேட்ச்கள் பிடித்து ஃபீல்டிங்கிலும் தன் அணிக்குக் கைகொடுத்தார் எட்வர்ட்ஸ்.
"கடந்த சில போட்டிகளாக எங்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பலரும் இன்னிங்ஸ் முடிவதற்கு முன்பே அவுட் ஆகிச் சென்றனர். அதனால் நான் கடைசி வரை களத்தில் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அப்படி இருக்கும்போது ஓரிரு வீரர்கள் நன்றாக ஆடினால் நல்ல ஸ்கோர் வரும் என்று நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக நாங்கள் நினைத்தது போல் கடைசியில் ஒரு நல்ல ஸ்கோர் அடித்தோம். வேன் டெர் மெர்வோடு விளையாடியது மிகவும் ஜாலியாக இருந்தது. உயிரைக் கொடுத்து ஓடக்கூடியவரான அவர், சில நேரங்களில் மிகவும் விநோதமான இடங்களில் ஷாட் அடிப்பார். எதிர் முணையில் நின்று அது ரசிப்பது வேடிக்கையாக இருக்கும். ஆர்யன் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்போது அவரை முடிந்த அளவுக்கு ஸ்டிரைக்கில் வைத்தேன். அவருக்கு அந்த திறமை இருந்தது. அது இந்தப் போட்டியின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. இன்று எங்கள் அணியின் செயல்பாட்டை நினைத்து பெருமைப் படுகிறேன். நாங்கள் இந்தத் தொடருக்குள் நுழையும்போது அரையிறுதி வாய்ப்பில் இருக்கக்கூடிய ஒரு அணியாக இருக்கவேண்டும் என்றுதான் நினைத்தோம். அது நடக்கவேண்டுமெனில், ஃபேவரிட்ஸாகக் கருதப்படும் தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு அணியை வீழ்த்தவேண்டும். அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் இது எங்களுக்கு மிகச் சிறந்த ஒரு வெற்றி"
ஸ்காட் எட்வர்ட்ஸ்