ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடிவருகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது முதலில் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று தொடர் 1-1 என சமன்பெற்றது.
இந்நிலையில் தொடர் வெற்றி யாருக்கு என்பதை உறுதிசெய்யும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
ஒருநாள் தொடர் முழுவதும் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா, ஷாகீன் அப்ரிடி முதலிய 3 பாகிஸ்தான் பவுலர்களின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி தடுமாறிய நிலையில், 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
பரபரப்பாக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, நசீம் ஷா மற்றும் ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மேக்ஸ்வெல்லை மீண்டும் டக் அவுட்டில் வெளியேற்றிய ஹாரிஸ் ராஃப், ஆஸ்திரேலியாவை எளிதாகவே ஆல்அவுட்டுக்கு அழைத்துச்சென்றார். நசீம் ஷா 3 விக்கெட்டுகள், ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகள் மற்றும் ஹாரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகள் என வீழ்த்த ஆஸ்திரேலியா 140 ரன்களுக்கு சுருண்டது.
அதன்பிறகு 141 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக பங்களிப்பை வழங்க, 26.5 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிய பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
கேரி கிர்ஸ்டன் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கம், பாபர் அசாம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கம், மோசமான தோல்விகள், கடுமையான விமர்சனங்கள் என பல்வேறு பிரச்னைகளுடன் ஆஸ்திரேலியாவுக்கு வந்த முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, 22 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு வக்கார் யூனிஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2002-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து ஒருநாள் தொடரை வென்ற நிலையில், 22 ஆண்டுகளுக்கு பின் முகமது ரிஸ்வான் தலைமையிலான அணி சாதனை படைத்துள்ளது. 2002-ம் தொடர் வெற்றியில் ஷோயப் அக்தர் தொடர் நாயகன் விருதை வென்ற நிலையில், 2024 தொடர் வெற்றியி ஹாரிஸ் ராஃப் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ம் தேதி தொடங்கவிருக்கிறது.