பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன்பே பேசுபொருளாக மாறிவிட்டது. இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - வங்கதேசம் போட்டியில் நடந்த கசப்பான அனுபவங்கள், சேப்பாக்கத்தில் நடந்த பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எப்படி வரவேற்பு இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. எதிர்பார்த்த படியே நெகிழ வைத்துவிட்டனர் தமிழ்நாட்டு ரசிகர்கள். சேப்பாக்கம் மைதானத்திற்குள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக தமிழ்நாட்டு ரசிகர்கள் பலர் பச்சை நிற ஜெர்ஸி உடன் முகாமிட்டது வைரல் ஆனது. பெரும்பாலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் ஜெர்ஸியைதான் அணிந்திருந்தார்கள். மைதானம் முழுக்க பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. இது ஒருபுறம் இருக்க தேசியக் கொடி சர்ச்சையும் மற்றொரு புறம் பற்றி எரிந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக்யு மற்றும் இமாம் உல் ஹாக் களமிறங்கினர். இமாம் 17 ரன்னில் நடையை கட்ட அப்துல்லா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். பாபர் அசாம் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க அப்துல்லா 58, முகமது ரிஸ்வான் 8, சௌத் சஹீல் 25 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அரைசதம் கடந்து சீரான வேகத்தில் ரன்களை சேர்த்து வந்தார் பாபர். நிச்சயம் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அதனை ஏமாற்றி 74 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ஷதாப் கான் மற்றும் இப்திகார் அஹமது தலா 40 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 250 ரன்களை கடந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் ஆட்டமிழந்த பின்னர் 250 ரன்களையாவது பாகிஸ்தான் எட்டுமா என்ற நிலை இருந்தது. ஆனால் ஒருவழியாக 283 ரன்கள் என்ற கவுரவமான இலக்கை ஆப்கானிஸ்தான் அணிக்கு பாகிஸ்தான் நிர்ணயித்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் நூர் அஹமது சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். நவீன் உல் ஹாக் இரண்டு விக்கெட் வீழ்த்தினாலும் 7 ஓவர்களில் 52 ரன் விட்டுக் கொடுத்தார். முகமது நபி 10 ஓவர்களில் 31 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார். ரஷித் கான் 10 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
283 ரன்கள் இலக்கு என்பதால் ஆப்கானிஸ்தானை எளிதில் பாகிஸ்தான் வீழ்த்தி விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் களத்தில் நடந்ததோ வேறு. பாகிஸ்தான் பந்துவீச்சை ஆப்கான் வீரர்கள் லெஃப்ட் கேண்டில் டீல் செய்தார்கள். தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடி காட்டிய குர்பாஸ் 53 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆடடமிழந்தார். ஜத்ரான் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை நோக்கி நகர்ந்தார். பாகிஸ்தான் வீரர்களோ மைதானத்தில் பீல்டிங் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வளவு பீல்டிங் மிஸ். பந்துவீச்சிலும் அவர்களின் பலவீனம் அப்படி வெளிப்பட்டது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு சுத்தமாக நெருக்கடி கொடுக்கவே இல்லை.
பாகிஸ்தான் தொடர்ந்து சொதப்ப மறுபுறம் ரஹ்மத் ஷா தரமான ஒருநாள் ஆட்டத்தை ஆடினார். ஜத்ரான், ரஹ்மத் ஷா இருவரும் ஆப்கான் அணியின் வெற்றியை கிட்டதட்ட உறுதி செய்திவிட்டனர். ஜத்ரான் 87 ரன்களில் ஆட்டமிழக்க ரஹ்மத் உடன் ஜோடி சேர்ந்தார் ஹஷ்மதுல்லா ஷஹிடி. இவரும் கேப் விடாமல் ரன்களை சேர்ந்தார்.
ஆட்டம் இறுதி ஓவர் வரை நெருங்கி சென்றதால் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் ஏதேனும் மேஜிக் செய்வார்கள் என்ற எண்ணமும் அந்நாட்டு ரசிகர்களுக்கு இருந்திருக்கும். ஆனால், களத்தில் ஒன்றுமே நடக்கவில்லை. எந்தவித பதற்றமும் இல்லாமல் 49 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி பெற்றது. ரஹ்மத் ஷா 77 ரன்களுடனும், ஷஹிடி 48 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
84 ரன்கள் விளாசிய ஜத்ரான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான் அணி. நடப்பு உலகக்கோப்பை ஆப்கானிஸ்தான் அணிக்கு இது இரண்டாவது வெற்றி. ஏற்கெனவே இங்கிலாந்து அணியை வீழ்த்தி மிரள வைத்திருந்தது ஆப்கான் அணி. இந்த வெற்றியின் மூலம் கடைசி இடத்தில் இருந்த அந்த அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது.
பாகிஸ்தான் அணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. தமிழ்நாட்டு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பிற்காகவாவது பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கலாம். பாபர் அசாம் சதம் விளாசி இருந்தாலும் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இரண்டுமே இந்தப் போட்டியில் மிஸ்ஸிங்.